அரசு மன்னிப்பு வழங்க வேண்டும்; ஐ.எஸ். பயங்கரவாதியின் தந்தை, மனைவி வேண்டுகோள்


அரசு மன்னிப்பு வழங்க வேண்டும்; ஐ.எஸ். பயங்கரவாதியின் தந்தை, மனைவி வேண்டுகோள்
x
தினத்தந்தி 23 Aug 2020 8:35 AM GMT (Updated: 23 Aug 2020 8:35 AM GMT)

டெல்லி போலீசார் கைது செய்த ஐ.எஸ். பயங்கரவாதிக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என அவரது தந்தை மற்றும் மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லக்னோ,

உத்தரபிரதேசத்தின் பலராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த முஸ்தகீம் கான் என்ற அபு யூசுப் என்பவர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக செயல்பட்டு வந்ததை கண்டறிந்த புலனாய்வுப்பிரிவினர் கடந்த 1 ஆண்டுக்கும் மேலாக அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் டெல்லி ரிட்ஜ் ரோடு வழியாக நேற்று முன்தினம் இரவில் மோட்டார் சைக்கிளில் சென்ற முஸ்தகீம் கானை கண்டறிந்த டெல்லி பயங்கரவாத தடுப்பு படை போலீசார், தவுலா குவான் மற்றும் கரோல் பாக் பகுதிகளுக்கு இடையே அவரை சுற்றி வளைத்தனர்.

அப்போது முஸ்தகீம் கான், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசார் மீது சுட்டார். உடனே போலீசாரும் திருப்பி சுட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை மூண்டது. இறுதியில் போலீசார் முஸ்தகீம் கானை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 2 பிரஷர் குக்கர் வெடிகுண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சம்பவ இடத்துக்கு தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் விரைந்து வந்து, ரோபோ உதவியுடன் அந்த வெடிகுண்டுகளை பத்திரமாக செயலிழக்க வைத்தனர்.

முஸ்தகீம் கான் வைத்திருந்த வெடிகுண்டுகள் இரண்டும் முழுவதும் தயார் நிலையில் இருந்தது. எனவே அவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அவர் போலீசிடம் சிக்கியிருப்பதன் மூலம் மிகப்பெரிய தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டு உள்ளது.

போலீசாரின் விசாரணையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். தளபதிகளிடம் முஸ்தகீம் கான் பயிற்சி பெற்றதும், இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த அவர்கள் திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்தது.  கோரசான் மாகாணத்தில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் இணையளதளம் வழியாகவும் முஸ்தகீம் கான் தொடர்பில் இருந்துள்ளார்.

காஷ்மீரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளுடனும் அந்நபர் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.  இதனை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் உள்ள முஸ்தகீம் கானின் சொந்த ஊரான பலராம்பூருக்கு அவரை அழைத்து சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், தற்கொலைப்படை ஜாக்கெட் உள்பட பெருமளவிலான வெடிபொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் நோக்கில் தற்கொலைப்படை ஜாக்கெட் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில், முஸ்தகீம் கானின் தந்தை கபீல் அகமது பலராம்பூரில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதற்காக நான் வருந்துகிறேன்.  சாத்தியம் இருக்குமென்றால் அவன் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.  ஆனால் அவனது செயல் தவறானது.

அவனது செயல்கள் பற்றி முன்பே தெரிய வந்திருந்தால், எங்களை விட்டு சென்று விடும்படி கூறியிருப்பேன் என கூறியுள்ளார்.

கானின் மனைவி பலராம்பூரில் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, அவர், வீட்டில் துப்பாக்கி வெடிமருந்து மற்றும் பிற பொருட்களை சேமித்து வைத்துள்ளார்.  இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என நான் அவரிடம் எடுத்து கூறினேன்.

ஆனால், நான் அவரை தடுக்க கூடாது என கூறி விட்டார்.  அவர் மன்னிக்கப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன்.  எனக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.  அவர்களை வைத்து கொண்டு நான் எங்கு செல்வேன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story