இந்தியாவும் சீனாவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: ரஷ்யா


இந்தியாவும் சீனாவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: ரஷ்யா
x
தினத்தந்தி 9 Sept 2020 12:04 PM IST (Updated: 9 Sept 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவும் சீனாவும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால் இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது.  இதனால் எல்லையில் பதற்ற நிலை நீடிக்கிறது.  

இந்த நிலையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.   எனவே நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர நாங்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என கூறப்பட்டது.  எனினும், எந்த மாதிரியான பதில் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இதேபோன்ற குற்றச்சாட்டை சீன வெளியுறவு அமைச்சகமும் வெளியிட்டுள்ளது.  இந்தியாவின் அணுகுமுறையானது ஒப்பந்த விதிமீறல் என்றும் இது தீவிர ராணுவ அத்துமீறல் நடவடிக்கை என்றும் சீனா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது.

எனினும், சீனாவின் இந்த குற்றச்சாட்டை இந்திய ராணுவம் நிராகரித்துள்ளது.  இது குறித்து இந்திய ராணுவம் கூறுகையில், ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறி இந்திய நிலைகளை நோக்கி நெருங்கி வர முயற்சித்ததோடு வானை நோக்கி சீனா துப்பாக்கியால் சுட்டது.  ஆனால், உள்நாட்டு, சர்வதேச சமூகங்களை சீனா தனது அறிக்கைகளால் ஏமாற்ற முயற்சிக்கிறது என தெரிவித்துள்ளது.

இருநாடுகளும் மாறி மாறி குற்றச்சாட்டு சுமத்தும் நிலையில், எல்லையிலும் படைகளை குவித்து வருவதால் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், இந்தியாவும் சீனாவும் பிரச்சினைகளுக்கு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்று ரஷ்யா அறிவுறுத்தியுள்ளது.

Next Story