லடாக் எல்லையில் மலைகளை கைப்பற்றிய இந்திய ராணுவம் !


லடாக் எல்லையில் மலைகளை கைப்பற்றிய இந்திய ராணுவம் !
x
தினத்தந்தி 11 Sept 2020 8:32 AM IST (Updated: 11 Sept 2020 8:32 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது

லடாக்,

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.

இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய நிலைகளில் ஒன்றை நோக்கி அத்துமீறி முன்னேறி துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, இந்திய தரப்பினர் மீது அபாண்டமாக பழி போட்டது. இதனால் லடாக்கில் இரு தரப்புகளும் படைகளை குவித்து, தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தொடர்ந்து சீனா எல்லையில் படைகளை குவித்து உள்ளது. இதனால், எல்லைப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில்,  பாங்கோங் சோ ஏரியின் தெற்கு கரையோரத்தில் சீன வீரர்களின் பிங்கர் 4  நிலை அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் சீன படையினர் கடந்த ஏப்ரல்-மே மாதங்களின் போது அத்துமீறி நுழைந்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள மலைத்தொடரில் தனது நிலைகளை அமைத்துள்ளனர்.  அந்த இடத்தை விட்டு சீன படைகள் வெளியேற வேண்டும் என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிங்கர் 4 பகுதியில் உள்ள மலைத்தொடரில் தொடர்ந்து தனது நிலைகளை அமைத்து வந்தனர்.

இந்நிலையில், பிங்கர் 4 பகுதியில் சீன படையினர் ஆக்கிரமித்துள்ள மலைத்தொடரை விட மிகவும் உயரமான மலைப்பகுதிகளை இந்திய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் நிலைகளை கண்காணிக்கும் வகையில் இந்த மலைப்பகுதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் இந்திய ராணுவம் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதற்கிடையே,  இந்தியா - சீனா ராணுவம் இடையே பிரிகாட் கமாண்டர் மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று கிழக்கு லடாக் பகுதியில் நடைபெறவுள்ளது. இருதரப்புக்கும் இடையே, தொடர்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இன்றைய  பேச்சுவார்த்தை இருக்கும் என ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. 

Next Story