இந்தியா- சீனா மாஸ்கோ 5 அம்ச கூட்டு அறிக்கை காகித பேச்சாக முடிவடையும்: சீன அரசு ஊடகம் சொல்கிறது
இந்தியா சீனா எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காணும் 5 அம்ச திட்ட கூட்டு அறிக்கை காகித பேச்சாக முடிவடையும்: என சீன அரசு ஊடகம் சொல்கிறது
புதுடெல்லி:
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. சமீப காலமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.
கடந்த 4-ந் தேதி மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது, சீன ராணுவ மந்திரி வெய் பெங்கியை இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது அவர், சீன துருப்புகள் ஒரு தலைபட்சமாக அசல் கட்டுப்பாட்டு கோட்டுடனான நிலைமையை மாற்ற முயற்சிக்கும் செயல், இரு தரப்பு ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று கண்டித்ததுடன், மோதல் பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக விலக்கிக்கொள்ள இந்தியாவுடன் சீனா இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால் அதன்பின்னரும் கடந்த 7-ந் தேதி இரவு சீன துருப்புகள் பயங்கரமான ஆயுதங்களுடன் லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய நிலைகளில் ஒன்றை நோக்கி அத்துமீறி முன்னேறி துப்பாக்கி சூடு நடத்தி விட்டு, இந்திய தரப்பினர் மீது அபாண்டமாக பழி போட்டது. இதனால் லடாக்கில் இரு தரப்புகளும் படைகளை குவித்து, தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்தநிலையில் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர், மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றார். இந்த கூட்டத்தின் நடுவே அவர் தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் வெளியுறவு மந்திரிகளை அடுத்தடுத்து சந்தித்து, இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ரிக்’ அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், இந்திய வெளியுறவு மந்திரி எஸ். ஜெய்சங்கர், லடாக் மோதல் வலுத்து வருகிற நிலையில் சீன வெளியுறவு மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், எல்லையில் நிலவும் பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்கள், மரபுகளை பின்பற்றி எல்லைப் பிரச்சினையை தீர்க்க 5 அம்ச திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் கூறி உள்ளதாவது:-
மாஸ்கோவில் சீன மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கை மற்றும் ஐந்து அம்ச ஒருமித்த கருத்து தற்போதைய எல்லை நிலைமையை குளிர்விப்பதில் கணிசமான முன்னேற்றத்தை குறிக்கிறது, இருப்பினும், கூட்டு அறிக்கை காகிதப் பேச்சாக முடிவடையக்கூடும்.
எவ்வாறாயினும், கூட்டு அறிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவது இந்திய தரப்பால் உண்மையிலேயே தனது வார்த்தையை காப்பாற்ற முடியுமா என்பதைப் பொறுத்தது.அந்த நாட்டின் வரலாற்றைப் பொறுத்தவரை, கூட்டு அறிக்கை வெறும் காகிதப் பேச்சாக முடிவடையும்.
"எல்லைப் பகுதிகளில் தற்போதைய மோதல்கள் இரு தரப்பினரின் நலன்களுக்கும் பலன் அளிக்காது. இரு நாடுகளின் எல்லைப் படையினரும் தங்களது தற்போதைய பேச்சுவார்த்தையை தொடர வேண்டும். தேவையான தூரத்தை பராமரிக்க வேண்டும் மற்றும் தற்போதைய பதற்றங்களைத் தணிக்க வேண்டும் என கூறி உள்ளது.
சீன பத்திரிகையாளரும் குளோபல் டைம்ஸின் ஆசிரியருமான ஹு ஜிஜின் சமீபத்தில் "ஒரு வலுவான இராணுவத்தால் மட்டுமே தூக்கமில்லாத இந்தியாவை எழுப்ப முடியும், வார்த்தைகள் போதாது என கூறி இருந்தார்
Related Tags :
Next Story