அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்திய 5 வாலிபர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது, சீனா


அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்திய 5 வாலிபர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது, சீனா
x
தினத்தந்தி 13 Sept 2020 5:15 AM IST (Updated: 13 Sept 2020 4:31 AM IST)
t-max-icont-min-icon

அருணாசலபிரதேசத்தில் இருந்து கடத்திய 5 வாலிபர்களை இந்தியாவிடம் சீன ராணுவம் ஒப்படைத்தது.

இட்டாநகர்,

சீனாவுடனான சர்வதேச எல்லையில் 1,080 கி.மீ. தொலைவை பகிர்ந்து கொள்ளும் மாநிலம், அருணாசலபிரதேசம்.

அங்கு மேல்சுபன்ஸ்ரீ மாவட்டத்தில் நச்சோ பகுதியில் உள்ள காட்டில் (மெக்மோஹன் கோட்டின் இந்திய பக்கத்தில் செரா எண் 7-ல்) கடந்த 2-ந்தேதி 7 வாலிபர்கள் வேட்டையாட சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சீன துருப்புகள் அவர் களை கடத்திச்சென்றனர்.

ஆனால் அந்த 7 பேரில் 2 பேர் அவர்கள் பிடியில் இருந்து தப்பினர். அவர்கள் திரும்பி வந்து நடந்த சம்பவம் பற்றி போலீசாரிடம் தெரிவித்தனர்.

லடாக்கில் அசல் கட்டுப்பாட்டுகோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறல்களால் போர்ப்பதற்றம் நிலவிய வேளையில், அருணாசலபிரதேசத்தில் 5 வாலிபர்களை சீன ராணுவம் கடத்திச்சென்றது, அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசும், ராணுவமும் மேற்கொண்டன. அதன் அடிப்படையில், 5 வாலிபர்களையும் இந்தியா வசம் ஒப்படைக்க சீன ராணுவம் ஒப்புக்கொண்டது.

12-ந்தேதி (நேற்று) எந்த நேரத்திலும், 5 வாலிபர்களும் இந்தியாவிடம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒப்படைக்கப்படுவார்கள் என அந்த மாநில எம்.பி.யும், மத்திய விளையாட்டு மந்திரியுமான கிரண் ரிஜிஜூ நேற்று முன்தினம் டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இதை தேஷ்பூரில் ராணுவ செய்தி தொடர்பாளர் ஹர்சவர்தன் பாண்டேயும் உறுதி செய்தார்.

அதன்படி கடத்தப்பட்ட டோச் சிங்கம், பிரசாத் ரிங்லிங், டாங்டு எபியா, தனு பேக்கர், நகரு டிரி ஆகிய 5 வாலிபர்களும், அஞ்சாவ் மாவட்டத்தில் இந்திய ராணுவத்திடம், சீன ராணுவத்தால் நேற்று காலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டனர்.

இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் ஹர்சவர்தன் தேஷ்பாண்டே கூறுகையில், “தேவையான நடைமுறைகளை முடித்த பின்னர் 5 வாலிபர்களும், சீன ராணுவத்தால் இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் 5 பேரும் தற்போது கொரோனா கால நெறிமுறைகளின்படி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன் பின்னர் அவர்களது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

இந்திய ராணுவத்தின் தொடர் முயற்சிகள் மற்றும் ஒருங்கிணைப்பை தொடர்ந்து, 5 பேரும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு விட்டனர் எனவும் அவர் கூறினார்.

5 வாலிபர்களும் பத்திரமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பது அவர்களது குடும்பத்தினருக்கு நிம்மதியை அளித்துள்ளது.

Next Story