சீனா உடனான எல்லைப் பிரச்சினை:பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம்


சீனா உடனான எல்லைப் பிரச்சினை:பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம்
x
தினத்தந்தி 15 Sep 2020 2:15 AM GMT (Updated: 15 Sep 2020 2:15 AM GMT)

சீனா உடனான எல்லைப் பிரச்சினை தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று விளக்கம் அளிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை, நீடித்து வருகிறது. கடந்த 3 மாதமாக லடாக்கில் அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15-ந் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது.

எல்லையில் அமைதியை நிலைநாட்ட இருநாட்டு தரப்பிலும், பலகட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அழைப்பு விடுத்து, சீன பாதுகாப்பு அமைச்சர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, ஒப்பந்தத்தை மீறி எல்லையில் ராணுவத்தை குவிக்கக் கூடாது என சீனாவிடம் ராஜ்நாத் சிங் கண்டிப்புடன் அறிவுறுத்தினார்.

அதைதொடர்ந்து, இந்திய-சீன வெளியுறவு அமைச்சர்கள் இடையே மாஸ்கோவில் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க 5 அம்ச திட்டத்தை நிறைவேற்றுவது என்று உடன்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக எல்லையில் கடந்த ஒரு வாரமாக சீன ராணுவம் எந்தவித அத்துமீறல்களிலும் ஈடுபடாமல் உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், சீனா உடனான மோதல் விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன.

இதைதொடர்ந்து, எல்லையில் தற்போதைய நிலை குறித்து, ராஜ்நாத் சிங் இன்றைய நாடாளுமன்றக் கூட்டத்தில் விரிவான அறிக்கையை வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story