இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது


இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்தது
x
தினத்தந்தி 15 Sep 2020 8:28 PM GMT (Updated: 15 Sep 2020 8:28 PM GMT)

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் 83 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

உலக அளவில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்று இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதனால் அதிக பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் தொடர்ந்து இந்தியா நீடிக்கிறது. நாட்டில் தினமும் ஏற்பட்டு வரும் புதிய பாதிப்பும் நின்றபாடில்லை.

இது ஒருபுறம் இருக்க நாட்டில் தினமும் ஏற்படும் கொரோனா பலிகளும் குறையவில்லை. அந்தவகையில் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 1,054 பேர் கொரோனாவால் மாண்டுள்ளனர். இதன் மூலம் மொத்த சாவு எண்ணிக்கை 80 ஆயிரத்து 776 ஆக அதிகரித்து உள்ளது. அதேநேரம் நாட்டின் பலி சதவீதம் 1.64 ஆகவே தொடர்கிறது.

இந்த நிலையில் நாட்டில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 83 ஆயிரத்து 809 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 49 லட்சத்து 30 ஆயிரத்து 236 ஆக அதிகரித்து உள்ளது. கடந்த 5 நாட்களாக 90 ஆயிரத்துக்கும் மேல் இருந்துவந்த தினசரி தொற்று எண்ணிக்கை தற்போது சற்று குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 79,292 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் 38 லட்சத்து 59 ஆயிரத்து 399 பேர் இதுவரை கொரோனாவை வென்றுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 78.28 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

வெறும் 9 லட்சத்து 90 ஆயிரத்து 61 பேர் மட்டுமே பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மொத்த எண்ணிக்கையில் இது 20.08 சதவீதம் ஆகும்.

சிகிச்சையில் உள்ள நோயாளிகளில் 48.8 சதவீதத்தினர் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். மேலும் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, சத்தீஷ்கார், ஒடிசா, கேரளா மற்றும் தெலுங்கானாவை சேர்ந்தவர்கள் மட்டுமே 24.4 சதவீதம் எனவும், சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கையிலும் மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 59.42 சதவீதம் ஆகும்.

இதைப்போல மொத்த பலி எண்ணிக்கையில் 37 சதவீதத்துக்கும் அதிகமானோர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். மேற்படி 24 மணி நேரத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளிலும் இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே 34.44 சதவீதத்தினர் (363 பேர்) என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா பரிசோதனையின் எண்ணிக்கை 5 கோடியே 83 லட்சத்து 12 ஆயிரத்து 273 ஆக அதிகரித்து உள்ளது. அந்தவகையில் தினமும் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பரிசோதனைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story