எல்லையில் தொடரும் அத்துமீறல்; இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்


எல்லையில் தொடரும் அத்துமீறல்; இந்தியா மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
x
தினத்தந்தி 17 Sep 2020 3:53 PM GMT (Updated: 17 Sep 2020 3:53 PM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

ஜம்மு,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மான்கோட் பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆனது, போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி இந்தியா மீது இரவு 7 மணியளவில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய நிலைகள் மீது சிறிய ரக ஆயுதங்கள் கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியும் மற்றும் சிறிய ரக பீரங்கிகளை கொண்டு தாக்குதல் நடத்தியும் வருகிறது.  இதனையடுத்து இந்திய ராணுவமும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது.

எல்லை பகுதியில் ஒருபுறம் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்து விட்டு மறுபுறம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது என இந்திய தரப்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.  இதனை உறுதிப்படுத்தும் வகையில், தடை செய்யப்பட்ட ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் சிலர் காஷ்மீரில் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

இதற்கு ஸ்ரீநகர் போலீசார் மற்றும் சி.ஆர்.பி.எப். போலீசார் கூட்டாக இணைந்து பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்தனர்.  இந்த என்கவுண்ட்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்க பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.  அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த என்கவுண்ட்டரில் சி.ஆர்.பி.எப். துணை தளபதி ராகுல் மாத்தூர் படுகாயமடைந்து உள்ளார்.  இதேபோன்று காயமடைந்த கவுன்சார் ஜன் என்ற பெண் பின்னர் உயிரிழந்து விட்டார்.  இந்நிலையில், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்தியா மீது அத்துமீறிய தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story