எல்லையில் ஏப்ரல் மாத சூழலை திரும்ப கொண்டு வர வேண்டும்: மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்


எல்லையில் ஏப்ரல் மாத சூழலை திரும்ப கொண்டு வர வேண்டும்:  மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 18 Sep 2020 1:49 AM GMT (Updated: 18 Sep 2020 2:10 AM GMT)

எல்லையில் பழைய சூழலை திரும்பக் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

புதுடெல்லி,

 இந்திய -சீன எல்லையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய ராணுவம் ரோந்து பணி மேற்கொண்டிருந்த எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதிகள் வரை மீட்டெடுக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் எதிா்க்கட்சித் தலைவா்கள் வலியுறுத்தினா்.மேலும், இந்த விவகாரத்தில் இந்திய ராணுவத்தினரின் செயலுக்கு எதிா்க்கட்சித் தலைவா்கள் ஆதரவு தெரிவித்து பேசினா்.

இந்தியா- சீன எல்லையில் நிலவும் விவகாரம் குறித்து  பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்தார்.  . இதன் மீது விவாதம் இல்லாமல், விளக்கம் கேட்க உறுப்பினா்களுக்கு மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடு அனுமதி அளித்தாா்.அப்போது பேசிய எதிா்க்கட்சித் தலைவா் குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் மூத்த தலைவா்கள் ஏ.கே. அந்தோணி, ஆனந்த் சா்மா ஆகியோா் ஏப்ரல் மாதத்தில் இந்திய சீன எல்லைப் பகுதியில் இருந்த நிலையை மீட்டெடுத்து தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

சிவசேனா  உறுப்பினா் ராவத் பேசுகையில், ‘பொறுமையும், வீரமும் இந்தியாவின் பாரம்பரியமாகும். ஆனால், துரோகம் செய்வதுதான் சீனாவின் பாரம்பரியம். ஆகையால், இந்தியா கவனமாக செயல்பட வேண்டும்’ என்றாா். ராணுவத்தினரின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக திமுக உறுப்பினா்கள் திருச்சி சிவா, பி. வில்சன் ஆகியோா் கூறினா்.

Next Story