இந்திய ஜனநாயகத்தின் முதுகை பா.ஜ.க. முறித்து விட்டது; திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு
இந்திய ஜனநாயகத்தின் முதுகை பா.ஜ.க. முறித்து விட்டது என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறிய 3 வேளாண் மசோதாக்களில் 2 வேளாண் மசோதாக்கள் மேலவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே, குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டன.
இதனால், கடந்த 70 ஆண்டுகளாக விவசாயிகள் சந்தித்து வந்த அநீதியில் இருந்து அவர்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு விடுவித்துள்ளது என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா கூறியுள்ளார்.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரீக் ஓ பிரையன் நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இன்று வரலாற்று தினம். எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மேலவையில் சில மைக்ரோபோன்களை உடைத்தனர். ஆனால், பா.ஜ.க. இந்திய ஜனநாயகத்தின் முதுகை முறித்து விட்டது.
வேளாண் மசோதாக்கள் மீது வாக்களிக்க எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா? வேறு பட்டனை அழுத்த அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததா?... அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மசோதா நிறைவேறியதா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து அவர், மேலவை தொலைக்காட்சி ஒளிபரப்பு கூட ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதனால் நாட்டின் மக்கள் அவையில் என்ன நடக்கிறது என கண்டுணர முடியவில்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சென்சார் செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு விதியும் உடைக்கப்பட்டு உள்ளன என கூறினார்.
திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், தி.மு.க. உள்பட 14 எதிர்க்கட்சிகள் அவையில் இருந்தன. நம்முடைய நாடாளுமன்ற நடைமுறை மற்றும் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு உள்ளது. இதனை நாம் அனைவரும் இன்று கண்டுள்ளோம் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story