கோதுமைக்கு ரூ.50 அதிகரிப்பு குறுவை சாகுபடி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு மத்திய அரசு அறிவிப்பு


கோதுமைக்கு ரூ.50 அதிகரிப்பு குறுவை சாகுபடி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Sep 2020 12:00 AM GMT (Updated: 21 Sep 2020 11:40 PM GMT)

கோதுமை உள்பட குறுவை சாகுபடி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி,

விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி உள்ளது. ஆனால் இந்த மசோதாக்களால் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முறை உள்ளிட்டவை பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதைப்போல இந்த மசோதாக்களால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குறுவை (ராபி) சாகுபடி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டி கூட்டத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த முடிவை நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் அறிவித்தார். அதன்படி கோதுமைக்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.50 அதிகரித்து ரூ.1,975 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல பயறுக்கு ரூ.225 அதிகரித்து ரூ.5,100 ஆகவும், பார்லிக்கு ரூ.75 அதிகரித்து ரூ.1,600 ஆகவும், துவரம் பருப்புக்கு ரூ.300 அதிகரித்து ரூ.5,100 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் கடுகுக்கு ரூ.225 அதிகரித்து ரூ.4,650 ஆகவும், குங்குமப்பூவுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.5,327 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

பின்னர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘குறுவை சாகுபடிக்கு முன் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைவிட அதிக உணவு தானியங்களை கடந்த 6 ஆண்டுகளில் கொள்முதல் செய்துள்ளோம். இதற்காக ரூ.7 லட்சம் கோடி, விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியைவிட சுமார் இருமடங்கு அதிகமாகும்’ என்று தெரிவித்தார்.

குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து இருக்கும் எனக்கூறிய தோமர், அதைப்போல ஏ.பி.எம்.சி. அங்காடிகளுக்கு வெளியேயும் விவசாயிகள் தங்கள் விளைபொருட் களை விற்கலாம் என்றும் கூறினார்.

ஆனால் மந்திரியின் அறிவிப்பை தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலர் வெளிநடப்பு செய்தனர்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக பின்னர் தனது டுவிட்டர் தளத்தில் தோமர் கூறுகையில், ‘கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, உற்பத்தி செலவை விட 106 சதவீதம் அதிகமாகும். இதைப்போல பயறு மற்றும் துவரம் பருப்புக்கு உற்பத்தி செலவை விட 78 சதவீதமும், பார்லிக்கு 65 சதவீதமும், கடுகுக்கு 93 சதவீதமும், குங்குமப்பூவுக்கு 50 சதவீதமும் அதிகரிக்கப்பட்டு உள்ளது’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

Next Story