கொரோனா, பல அலைகளாக வந்து தாக்கும் நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்


கொரோனா, பல அலைகளாக வந்து தாக்கும் நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்
x
தினத்தந்தி 23 Sep 2020 7:05 PM GMT (Updated: 23 Sep 2020 7:05 PM GMT)

கொரோனா, பல அலைகளாக வந்து தாக்கும் நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், “இந்தியாவில் கொரோனா 2-வது அலை வருமா?” என்று நேற்று கேட்கப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி அஸ்வினி சவுபே பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

ஒரு புதிய வைரசால் உண்டாகும் தொற்றுநோய், பல அலைகளாக வந்து மனிதர்களை தாக்கும் இயல்பு கொண்டது. ஒவ்வொரு அலையிலும் ஏராளமானோரை தாக்கும்.

கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடுகள், தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

எந்த தொற்றுநோயுமே முதலில் உயர்ந்து, உச்சம் பெற்று, பின்னர் படிப்படியாக குறையும். அந்த தொற்று பரவல் சங்கிலியை உடைப்பதற்கு மத்திய அரசு வியூகம் வகுத்து செயல்படுகிறது.

இந்தியாவில் சில மாவட்டங்களில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 75 சதவீதம்பேர், 10 மாநிலங்களில்தான் உள்ளனர். இதன்மூலம், இந்தியாவில் கொரோனா பரவல், கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பதை உணரலாம்.

கொரோனா, சமூக பரவல் நிலையை எட்டி விட்டதா என்பதற்கு இதுதான் எனது பதில். கொரோனா பாதிப்பும், மரணங்களும் குறைவாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. சுகாதாரம் என்பது மாநில பட்டியலில் இருக்கிறது. எனவே, பாதிப்பு அதிகமான இடங்களில், சுகாதார கட்டமைப்புகளை அதிகரிக்கும்படி மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

மூன்றடுக்கு சுகாதார வசதிகளை உருவாக்குமாறு கூறியுள்ளோம். நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 256 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story