வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கைது


வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கைது
x
தினத்தந்தி 2 Oct 2020 12:01 AM IST (Updated: 2 Oct 2020 2:11 AM IST)
t-max-icont-min-icon

வேளாண் மசோதாக்களுக்கு எதிராக கட்சியினருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் கைது செய்யப்பட்டார்.

ஹரியானா,

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக, மாநிலம் முழுவதும் பல்வேறு விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சிரோமணி அகாலிதள கட்சி சார்பாகவும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை சிரோமணி அகாலிதள கட்சி சார்பாக, விவசாய மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தி மூன்று இடங்களில் ஊர்வலங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அமிர்தசரஸ் பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலத்தை அக்கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையேற்று நடத்தினார்.

ஹர்சிம்ரத் கவுர் பாதல் தலைமையில் பதிந்தா பகுதியில் இருந்து அணிவகுப்பு நடந்தது. மேலும் அகாலிதள தலைவர்கள் பிரேம் சிங் சந்துமாஜ்ரா மற்றும் தல்ஜித் சிங் சீமா ஆகியோரின் தலைமையில் மூன்றாவது ஊர்வலம் ஆனந்த்பூர் சாஹிப்பிலிருந்து தொடங்கியது.

இந்த மூன்று ஊர்வலங்களும் சண்டிகரில் ஒன்றிணைந்து, பின்னர் பஞ்சாப் கவர்னர் வி.பி.சிங் பட்னூரை சந்தித்து வேளாண் மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தப்போவதாக அறிவித்தனர். இந்நிலையில் சண்டிகருக்குள் நுழைவதற்குள் அகாளிதள கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விவசாயிகளின் உரிமைகளுக்காகப் பேசியதற்காக நாங்கள் கைது செய்யப்படுகிறோம். ஆனால் நாங்கள் நேர்மையாக இருக்கிறோம். இந்த சக்தியால் எங்கள் படையை அமைதிப்படுத்த முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story