பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார்- சோனியா காந்தி
பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துவிட்டார் என சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,
வேளாண் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் பிரதமர் மோடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய அநீதி இழைத்துள்ளதாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சோனியா காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- “இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் உள்ளது என்பதை மோடி அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது விவசாயிகளை ஆலோசிக்காமல் எந்தவொரு வேளாண் சட்டத்தையும் அமல்படுத்தியதில்லை.
ஆனால் மோடி தலைமையிலான அரசு விவசாயிகளை கலந்தாலோசிக்காமல் முதலாளிகளுக்காக சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறும் வரை விவசாயிகளுடன் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபிலிருந்து டெல்லி நோக்கி அக்டோபர் 3 முதல் 5-ஆம் தேதி வரை ராகுல்காந்தி தலைமையில் டிராக்டர் பேரணி நடைபெறும். இதில் பஞ்சாப் விவசாயிகள் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டும்'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story