ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பலாத்கார சம்பவம்; மாவட்ட கலெக்டரை நீக்க பிரியங்கா, மாயாவதி கோரிக்கை


ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பலாத்கார சம்பவம்; மாவட்ட கலெக்டரை நீக்க பிரியங்கா, மாயாவதி கோரிக்கை
x
தினத்தந்தி 5 Oct 2020 3:03 AM IST (Updated: 5 Oct 2020 3:03 AM IST)
t-max-icont-min-icon

ஹத்ராஸ் இளம்பெண் தாக்கப்பட்டு பலியான சம்பவத்தில், மாவட்ட கலெக்டரை நீக்குமாறு பிரியங்கா, மாயாவதி ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயதான பட்டியல் இன இளம்பெண், கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் பலியானார்.

அந்த குடும்பத்தினரை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும், பொதுச்செயலாளர் பிரியங்காவும் நேற்று முன்தினம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இந்நிலையில், பிரியங்கா நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மாவட்ட கலெக்டர் தங்களை மிக மோசமாக நடத்தியதாக ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஆயினும், கலெக்டர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரை பாதுகாப்பது யார்? அவரை உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.

குடும்பத்தினர் நீதி விசாரணை கேட்கும்போது, சி.பி.ஐ. விசாரணை என்றும், சிறப்பு புலனாய்வு விசாரணை என்றும் திசைதிருப்புவது ஏன்? உத்தரபிரதேச அரசு, தூக்கத்தில் இருந்து சற்று எழுந்தாலும் கூட குடும்பத்தினரின் கருத்துகளை கேட்க வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் தங்களை மிரட்டியதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும், உத்தரபிரதேச அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது.

சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரை செய்தபோதிலும், கலெக்டர் அங்கு இருக்கும்போது எப்படி பாரபட்சமற்ற விசாரணை நடக்கும். எனவே, கலெக்டரை இடைநீக்கம் செய்ய வேண்டும். மாநில அரசின் செயல் குறித்து மக்கள் சந்தேகப்படுகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story