இந்தியாவில் 800 மில்லியன் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை விநியோகித்தோம் - பிரதமர் மோடி பேச்சு


இந்தியாவில் 800 மில்லியன் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை விநியோகித்தோம் - பிரதமர் மோடி பேச்சு
x
தினத்தந்தி 8 Oct 2020 9:06 PM IST (Updated: 8 Oct 2020 9:06 PM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் 800 மில்லியன் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை விநியோகித்ததாக கனடா முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.

புதுடெல்லி,

கனடாவில் இன்று நடைபெற்ற இந்தியாவில் முதலீடு தொடர்பான மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த மாநாட்டில் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், முதலீட்டு நிதியங்கள், மற்றும் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா-கனடா இடையிலான வணிக உறவுகள் மற்றும் இருநாட்டு பொருளாதாரம் குறித்து பேசினார். இந்தியாவில் வர்த்தகம், தொழில் வளர்ச்சி மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் பல்வேறு தரப்பில் செயல்படுத்தப்பட்டு வருவதாக மோடி குறிப்பிட்டார்.

மேலும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது;-

“இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருக்கக்கூடிய பொதுவான அம்சத்தின் மூலமாக இரு தரப்புக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. எந்தவொரு நாட்டிலும் முதலீடு செய்வதற்கு முன்பாக ஜனநாயகம் இருக்கிறதா, அரசியல் நிலைத்தன்மை இருக்கிறதா என்று சிந்தியுங்கள்.

இந்தியாவில் 800 மில்லியன் மக்களுக்கு இலவசமாக ரேஷன் பொருட்களை விநியோகித்தோம். கொரோனா பேரிடர் காலத்தில் நோய் தொற்றை எதிர்த்து திறம்பட போராடி வருகிறோம். அதே வேளையில் பொருளாதாரத்தை சீர்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். இந்தியாவின் அந்திய முதலீடு ஈர்ப்பு 23 சதவீதம் அதிகரித்துள்ளது. 6 மாதங்களில் இந்தியா 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டை ஈர்த்துள்ளது.

விவசாயத்துறையில் கொண்டு வந்துள்ள மாற்றத்தின் காரணமாக விவசாயிகளுக்கு லாபம் அதிகரிப்பது மட்டுமின்றி ஏற்றுமதியும் அதிகரிக்கும். தொழில் முனைவோர் மற்றும் கடுமையாக உழைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடிய சூழல் உண்டாகியுள்ளது. மேலும் உற்பத்தி, சேவை, கல்வித்துறையில் நீங்கள் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கு சிறப்பான இடம் இந்தியா தான்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story