பழங்குடி பெண் பலாத்காரம்; குடும்பத்தினரை காங்கிரசார் ஏன் சந்திக்கவில்லை? பா.ஜ.க. எம்.பி. கேள்வி


பழங்குடி பெண் பலாத்காரம்; குடும்பத்தினரை காங்கிரசார் ஏன் சந்திக்கவில்லை? பா.ஜ.க. எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 13 Oct 2020 3:47 AM GMT (Updated: 13 Oct 2020 3:47 AM GMT)

சத்தீஷ்காரில் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட பழங்குடி பெண்ணின் குடும்பத்தினரை காங்கிரசார் ஏன் சந்திக்கவில்லை என்று பா.ஜ.க. எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

கொண்டகாவன்,

சத்தீஷ்காரில் காங்கிரஸ் கட்சி தலைமையில் முதல் மந்திரி புபேஷ் பாகல் ஆட்சி செய்து வருகிறார்.  சத்தீஷ்காரின் கொண்டகாவன் பகுதியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. எம்.பி. மோகன் மாண்டவி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்பொழுது, ஹத்ராசில் கொடுமை எதுவும் நடைபெறவில்லை.  அவை ஜோடிக்கப்பட்ட சம்பவங்கள்.  காங்கிரஸ் தலைவர்கள் அங்கு செல்கின்றனர்.  அதனை கொடுமை நடந்தது போல் வெளிகாட்டுகின்றனர்.  சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டால் ஒவ்வொரு 4 முதல் 5 கிராமங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிவரும்.

காங்கிரஸ் தலைவர்கள் பழங்குடியின இளம்பெண்ணுக்கு கொடுமை நடந்த பஸ்தாருக்கு ஏன் வரவில்லை? பஸ்தாரில் பெண்களுக்கு எதிராக எண்ணிலடங்கா கொடுமைகள் நடந்து வருகின்றன.  அரசாங்கம் தூங்கி கொண்டிருக்கிறது.

காங்கிரசார் ஜோடிக்கப்பட்ட சம்பவ பகுதிக்கு செல்கிறார்கள்.  ஆனால், இங்கு நடைபெறும் சம்பவங்களை எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முதல் மந்திரி (புபேஷ் பாகல்) கவனத்தில் கொள்ளாமல் உள்ளனர் என்று கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஹத்ராசில் கடந்த செப்டம்பர் 14ந்தேதி 19 வயது தலித் இளம்பெண் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார்.  அவர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தில் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29ந்தேதி உயிரிழந்து விட்டார்.

சத்தீஷ்காரின் கொண்டகாவன் மாவட்டத்தில் தனோரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன் தனது தோழியுடன் பழங்குடியின் இளம்பெண் ஒருவர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார்.

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபொழுது, 7 பேர் அந்த இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி அருகேயிருந்த வன பகுதிக்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.  இதன்பின்னர் வீடு திரும்பிய அந்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினர் புதைத்து விட்டனர்.  போலீசார் இதுவரை எப்.ஐ.ஆர். கூட பதிவு செய்யவில்லை என அவர்கள் குற்றச்சாட்டு கூறி வந்தனர்.  இதனால் மனமுடைந்த, இளம்பெண்ணின் தந்தை கடந்த 4ந்தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இதன்பின்னரே சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்து சர்ச்சையானது.  இதனால் கடந்த 2 மாதங்களுக்கு பின்னர் இளம்பெண்ணின் உடலை தோண்டி எடுத்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

Next Story