காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ ஆயுத கடத்தல் முயற்சியை முறியடித்த இந்திய படைகள்


காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ ஆயுத கடத்தல் முயற்சியை முறியடித்த இந்திய படைகள்
x
தினத்தந்தி 13 Oct 2020 5:51 AM GMT (Updated: 13 Oct 2020 5:51 AM GMT)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்ட ஆயுத கடத்தல் முயற்சியை இந்திய படைகள் முறியடித்துள்ளன.

ஜம்மு,

சீனாவுடனான எல்லை பதற்றம் ஒருபுறம் இருக்க இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கொண்டு இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் மறுபுறம் போர்நிறுத்த ஒப்பந்தங்களை மீறி அத்துமீறிய தாக்குதல், பயங்கரவாத ஊடுருவல் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

இதற்காக பாகிஸ்தானின் ராணுவம், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பு ஆகியவை திட்டம் தீட்டி வருகிறது.  இதன் ஒரு பகுதியாக இந்திய எல்லை பகுதி வழியே ஆயுதங்களை கடத்துவதும், ஆளில்லா விமானங்கள் வழியே வானில் இருந்து ஆயுதங்களை கீழே போடுவதும் போன்ற செயல்களும் நடந்து வருகின்றன.

இதனை காஷ்மீர் போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.  பல முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்தும் உள்ளது.  இந்த நிலையில், இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் இருந்து ஆயுதங்களை கடத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு உள்ளது.

காஷ்மீரின் தங்தார் பிரிவில் பணியில் ஈடுபட்டு இருந்த இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானின் இந்த முயற்சியை முறியடித்து உள்ளது.  இதில், 5 பிஸ்டல்கள், தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Next Story