இந்தியாவில் கொரோனா பாதிப்பு மளமளவென சரிவு: ஒரு நாள் வைரஸ் தொற்று 55 ஆயிரமாக குறைந்தது


இந்தியாவில் கொரோனா பாதிப்பு மளமளவென சரிவு: ஒரு நாள் வைரஸ் தொற்று 55 ஆயிரமாக குறைந்தது
x
தினத்தந்தி 13 Oct 2020 11:15 PM GMT (Updated: 2020-10-14T03:24:33+05:30)

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மளமளவென சரிகிறது. ஒரு நாள் வைரஸ் தொற்று பாதிப்பு, 55 ஆயிரமாக குறைந்தது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி அடியெடுத்து வைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று வேகம் எடுத்தது. தினமும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வந்தது, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதுவும் கடந்த மாதம் 17-ந் தேதி ஒரே நாளில் 97 ஆயிரத்து 894 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது, நடுங்க வைத்தது. எங்கே போகிறது இந்த கொரோனாவின் பாதை என அத்தனைபேரையும் கேட்க வைத்தது.

ஆனால் அப்படிப்பட்ட கொரோனா தொற்று பரவல் இந்த மாதம் இறங்குமுகம் காணத்தொடங்கி இருப்பது நிம்மதிப்பெருமூச்சு விட வைத்துள்ளது.

நேற்று முன்தினம் 66 ஆயிரத்து 732 பேருக்கு பாதிப்பு பதிவானது. நேற்று அது 55 ஆயிரத்து 342 ஆக சரிந்தது. அதுவும் 12-ந் தேதியன்று 10 லட்சத்து 73 ஆயிரத்து 14 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டும் பாதிப்பு இந்த அளவுக்கு மளமளவென குறைந்து இருப்பது குறிப்பிடத்தகுந்த அம்சமாக உள்ளது. குறிப்பாக புதிதாக தொற்று பாதிப்பு தொடர்ந்து 5-வது நாளாாக 75 ஆயிரத்துக்கு குறைவாக பதிவாகி இருக்கிறது.

நாட்டில் கொரோனாவின் மொத்த பாதிப்பு என்பது 71.75 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் குறையத்தொடங்கி இருக்கிறது. நேற்று முன்தினம் 816 பேர் கொரோனாவால் இறந்த நிலையில் நேற்று உயிரிழப்பு 706 ஆக குறைந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் மட்டும் 165 பேர் இறந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 856 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் 40 ஆயிரத்து 514 பேர் இறந்துள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் தமிழகம் உள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள கர்நாடகத்தில் 10 ஆயிரத்து 36 பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா இறப்புவிகிதம் 1.53 சதவீதமாக குறைந்து விட்டது. இது உலகின் மிகக்குறைந்த இறப்புவிகிதங்களில் ஒன்று என்பது கோடிட்டு காட்டத்தக்கது.

அதுமட்டுமல்ல, தொடர்ந்து 10 நாளாக இறப்பு என்பது 1,000-க்குள்தான் இருந்து வருகிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 77 ஆயிரத்து 760 பேர் கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது. இதனால் குணம் அடைந்தோர் எண்ணிக்கை 62 லட்சத்து 27 ஆயிரத்து 295 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா மீட்பு விகிதம் 86.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 8.89 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்.) புள்ளி விவரம் சொல்கிறது.

தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 38 ஆயிரத்து 729 ஆகும். நேற்று தொடர்ந்து 5-வது நாளாக, சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்துக்கு கீழே இருந்தது.

சிகிச்சை பெறுவோரின் விகிதம் 11.69 சதவீதமாக சரிந்துள்ளது.


Next Story