ஹத்ராஸ் இளம்பெண்ணின் அஸ்தியை கரைக்க மாட்டோம்: ஐகோர்ட்டில் ஆஜராகி விட்டு திரும்பிய குடும்பத்தினர் அறிவிப்பு
ஹத்ராஸ் இளம்பெண்ணின் மரணத்துக்கு நீதி கிடைக்கும்வரை அவரது அஸ்தியை கரைக்க மாட்டோம் என்று அவருடைய குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான பட்டியலின இளம்பெண், கடந்த மாதம் 14-ந்தேதி 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 2 வார கால சிகிச்சைக்கு பிறகு, அந்த பெண் உயிரிழந்தார். அவரது உடல், நள்ளிரவில் போலீசாரால் தகனம் செய்யப்பட்டது.
இந்த வழக்கை எடுத்துக்கொண்ட அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ கிளை, ஹத்ராஸ் இளம்பெண்ணின் குடும்பத்தினர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி உத்தரவிட்டனர். அதன்படி, நேற்று முன்தினம், இளம்பெண்ணின் தாய், தந்தை, 3 சகோதரர்கள் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். 5 பேரும் ஐகோர்ட்டில் ஆஜராகி விட்டு இரவிலேயே வீடு திரும்பினர்.
இந்நிலையில், நேற்று அவர்கள் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். இளம்பெண்ணின் தந்தை கூறியதாவது:-
கோர்ட்டில் எங்கள் வேதனையை தெரிவித்தோம். ஆனால், ஆங்கிலத்திலேயே விவாதம் நடந்ததால், எங்களுக்கு பெரிதாக புரியவில்லை. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் மீது கோர்ட்டுக்கு திருப்தி இல்லை என்பது புரிந்தது.
நாங்கள் இப்போது நீதி கேட்கிறோம். நீதி கிடைக்கும்வரை, என் மகளின் அஸ்தியை கரைக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இளம்பெண்ணின் சகோதரரும் இதே கருத்தை தெரிவித்தார்.
ஹத்ராஸ் மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் லஷ்கரும் ஐகோர்ட்டு கிளையில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் தனது வாக்குமூலத்தில் கூறியதாவது:-
இளம்பெண்ணின் கிராமத்துக்கு வெளியே கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் சமூக விரோத கும்பல் திரண்டிருந்தது. பெண்ணின் உடலும் அழுகிக்கொண்டிருந்தது. ஆகவே, சூழ்நிலையை கருதியும், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியும் நள்ளிரவிலேயே உடல் தகனம் செய்யும் முடிவை நான் எடுத்தேன்.
உடல் தகனம் நடக்கும்போது, குடும்பத்தினரின் ஒப்புதல் பெறப்பட்டது.
‘ஜஸ்டிஸ் பார் ஹத்ராஸ்’ என்ற இணையதளம், ஹத்ராஸ் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை உருவாக்க முயன்றது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா போன்ற அமைப்புகளும், பத்திரிகையாளர்களும் பெண்ணின் குடும்பத்தினரை தூண்டி விட்டதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.
மாநிலத்தின் நல்லிணக்கத்தை கெடுக்க பீம் ஆர்மிக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிதிஉதவி அளித்ததாக உளவுத்துறை தகவல் கூறுகிறது. சில நக்சல் அமைப்புகளும் வகுப்பு கலவரத்தை தூண்ட முயன்றதாக தகவல்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கூடுதல் தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. ஆகியோரும் ஐகோர்ட்டில் சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை, நவம்பர் 2-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஹத்ராஸ் இளம்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் இடத்தை இவ்வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. நேற்று நேரில் ஆய்வு செய்தது. அந்த இடத்தை அடையாளம் காட்டுவதற்காக, பெண்ணின் சகோதரரை அழைத்து சென்றிருந்தது.
அடுத்தகட்டமாக, மத்திய தடயவியல் ஆய்வுக்கூடத்தை சேர்ந்த தடயவியல் நிபுணர்களை அழைத்து வந்து விரிவாக ஆய்வு செய்ய சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
Related Tags :
Next Story