நாட்டின் வளர்ச்சிக்கு ‘கலாமின் பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது’ - பிறந்த நாளில் மோடி புகழாரம்


நாட்டின் வளர்ச்சிக்கு ‘கலாமின் பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது’ - பிறந்த நாளில் மோடி புகழாரம்
x
தினத்தந்தி 15 Oct 2020 11:00 PM GMT (Updated: 15 Oct 2020 9:48 PM GMT)

நாட்டின் வளர்ச்சிக்கு ‘கலாமின் பங்களிப்பை நாடு ஒருபோதும் மறக்காது’ என்று அவரது பிறந்த நாளில் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

புதுடெல்லி, 

நாட்டின் வளர்ச்சிக்கு அப்துல் கலாம் செய்த பங்களிப்பை நாடு ஒரு போதும் மறக்காது என்று அவரது பிறந்த நாளில் பிரதமர் மோடியும், தலைவர்களும் புகழாரம் சூட்டினர்.

மக்கள் ஜனாதிபதி, ஏவுகணை நாயகன் என்று நாட்டு மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 89-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு புகழாரம் சூட்டினார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், “டாக்டர் கலாமுக்கு அவரது பிறந்த நாளில் அஞ்சலி. அவர் ஒரு விஞ்ஞானியாகவும், இந்தியாவின் ஜனாதிபதியாகவும் நாட்டின் வளர்ச்சியில் செய்த அழியாத பங்களிப்பை இந்தியா ஒரு போதும் மறக்க முடியாது. அவரது வாழ்க்கை பயணமானது, கோடிக்கணக்கானோருக்கு பலத்தை அளிக்கிறது” என கூறி உள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் மோடி, அப்துல் கலாம் படத்தொகுப்பையும் இணைத்து இருக்கிறார்.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா விடுத்துள்ள செய்தியில், “பாரத ரத்னா அப்துல் கலாமை அவரது பிறந்த நாளில் நினைவுகூறுகிறோம். அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர். இந்தியாவின் விண்வெளி மற்றும் ஏவுகணை திட்டங்களில் அவர் பலமான, சுய சார்புள்ள இந்தியாவை கட்டமைக்க எப்போதும் விரும்பினார். அறிவியல் மற்றும் கல்வித்துறையில் அவரது அழியாத மரபு, உத்வேகம் அளிப்பதாகும்” என கூறி உள்ளார்.

ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரியுமான அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் கலாமுக்கு புகழாரம் சூட்டி உள்ளனர்.

டாக்டர் அப்துல் கலாமின் பிறந்த நாள், உலக மாணவர் தினமாக 2010-ம் ஆண்டு, ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டு கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.


Next Story