திருப்பதி தேவஸ்தான காணிக்கை பணத்தை டெபாசிட் முறையில் ஆந்திர அரசு பெற முடிவு: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு


திருப்பதி தேவஸ்தான காணிக்கை பணத்தை டெபாசிட் முறையில் ஆந்திர அரசு பெற முடிவு: அரசியல் கட்சிகள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 18 Oct 2020 2:09 AM GMT (Updated: 18 Oct 2020 2:09 AM GMT)

திருப்பதி தேவஸ்தான காணிக்கை பணத்தை, டெபாசிட் முறையில் அரசு பெற்று பொதுமக்கள், அரசு ஊழியர்களின் பயன்பாட்டுக்கு செலவிட முடிவு செய்திருப்பதாக தகவல் பரவி உள்ளது.

திருப்பதி, 

திருப்பதி தேவஸ்தான காணிக்கை பணத்தை, டெபாசிட் முறையில் அரசு பெற்று பொதுமக்கள், அரசு ஊழியர்களின் பயன்பாட்டுக்கு செலவிட முடிவு செய்திருப்பதாக தகவல் பரவி உள்ளது. அதற்கு தெலுங்கு தேசம் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் அங்குள்ள பிரதான உண்டியலில் ரூபாய் நோட்டுகள், சில்லறை நாணயங்கள், தங்கம், வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அந்தக் காணிக்கை பணம் உடனுக்குடன் எண்ணப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன. திருப்பதி தேவஸ்தானம் சார்பாக பல்வேறு வங்கிகளில் காணிக்கை பணம் குறிப்பிட்ட ஆண்டுக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.தேவஸ்தான முதலீட்டுக்கு வங்கிகள் குறிப்பிட்ட சதவீத வட்டியை வழங்கி வருகிறது. காணிக்கை பணம் டெபாசிட் காலம் வருகிற டிசம்பர் மாதம் முதிர்வடைய உள்ளது.

தேவஸ்தான காணிக்கை பணம் டெபாசிட் காலம் முதிர்வடைந்ததும், அந்த முதிர்வு தொகையை ஆந்திர மாநில அரசின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய வேண்டும், என தேவஸ்தான அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கேட்டுள்ளனர். அதற்கு, அரசு கூடுதலாக வட்டி வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.

தேவஸ்தான காணிக்கை பணத்தை, ஆந்திர மாநில அரசின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்வது தொடர்பாக சமீபத்தில் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதம் நடத்தி முடிவெடுக்கப்பட்டுள்ளது. அந்த முடிவுக்கு தெலுங்கு தேசம் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கடும் எதிர்ப்புக்கு இடையே, தேவஸ்தான காணிக்கை பணம் வருகிற டிசம்பர் மாதத்துக்குமேல் ஆந்திர மாநில அரசின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநில அரசு கருவூலம் காலியாக உள்ளது. அரசு எந்திரத்தை இயக்க போதிய நிதி ஆதாரம் இல்லை எனக்கூறப்படுகிறது. தேவஸ்தான காணிக்கை பணத்தை டெபாசிட் முறையில் அரசு பெற்றால், அந்தப் பணத்தில் பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் செலவிடலாம் என அரசு திட்டமிட்டுள்ளது. எனினும், தேவஸ்தான பணத்தை அரசு பயன்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

Next Story