இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது - ராஜ்நாத் சிங்


இந்தியா எப்போதும் அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 24 Oct 2020 4:29 PM GMT (Updated: 24 Oct 2020 4:29 PM GMT)

இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நட்பு உறவையே தொடரவே விரும்புகிறது என்று பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

டார்ஜிலிங்,

எல்லைப் பிரச்னை நிலவும் சூழலில் சீனாவை ஒட்டியுள்ள சிக்கிம் மாநிலத்தில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்றும் நாளையும் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அப்போது சீன துருப்புகளால் ஊடுருவக்கூடிய முயற்சியை தடுக்கும் வகையில், இந்திய படைகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை அமைச்சர் பார்வையிட உள்ளார்.

அதன்படி, இன்று சுக்னாவை தலைமையிடமாகக் கொண்ட கேங்டோக், கலிம்போங் மற்றும் பின்னகுரி ஆகிய மலைப்பகுதிகளில் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொண்டார்.

குறிப்பிட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் 12 ஆயிரம் வீரர்கள் வரையில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு படைகளின் செயல்பாடு மற்றும் தயார்நிலை தொடர்பாக கேட்டறிந்தார். 

இந்நிலையில், டார்ஜ்லிங்கில் கலாச்சார நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 

இந்தியா எப்போதும் தனது அண்டை நாடுகளுடன் நல்ல உறவை தொடரவே விரும்புகிறது, அதற்கான முயற்சிகளில் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். சில சமயங்களில் நமது எல்லையை பாதுகாக்க நமது வீரர்கள்  வாழ்க்கையை தியாகம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கல்வானில் 20 ராணுவ வீரர்கள் தாய்நாட்டிற்காக தங்களை தியாகம் செய்துள்ளார்கள். அவர்களின் தியாகம் வீண் போகாது. தேசமும் அதன் எல்லைகளும் உங்களால் பாதுகாக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதைதொடர்ந்து நாளை, நாது லா மற்றும் எல்லை அருகே உள்ள பிற பகுதிகளிலும் ராஜ்நாத் சிங் ஆய்வு மேற்கொள்கிறார். அப்போது, வீரர்களுடன் கலந்துரையாடும் ராஜ்நாத் சிங் தசராவை முன்னிட்டு நடைபெறும் சாஸ்த்ரா பூஜையிலும் கலந்து கொள்கிறார்.

இந்தியா-சீனா இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் சமயத்தில், ராஜ்நாத் சிங் எல்லையில் ஆய்வு மேற்கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Next Story