பண்டிகை காலம்; டெல்லியில் கொரேனா தொற்று அச்சமின்றி பஜாரில் குவிந்த மக்கள்
டெல்லியில் கொரேனா தொற்று பற்றிய அச்சமின்றி பண்டிகை காலத்தினை முன்னிட்டு பஜாரில் மக்கள் திரண்டிருந்தனர்.
புதுடெல்லி,
கொரோனா வைரசின் பாதிப்புகள் அச்சுறுத்தலாக உள்ள நிலையில் முக கவசம் அணிதல், சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றும்படி அரசாங்கம் மக்களை வலியுறுத்தி வருகிறது. தடுப்பு மருந்துகள் இல்லாத சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தி வருகிறது.
எனினும், நாட்டில் தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் டெல்லி உயர் நீதிமன்றம் நாட்டின் கொரோனா வைரசின் தலைநகராக டெல்லி உருமாற கூடும் என வேதனை தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 7,745 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இதனை டெல்லி அரசு அறிவித்து உள்ளது. இந்த சூழலில் பண்டிகை காலம் நெருங்குகிறது. இதனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என முதல் மந்திரி கெஜ்ரிவால் கேட்டு கொண்டார்.
ஆனால் டெல்லி மக்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை. அதுபற்றிய கவலையும் இல்லை என்பதுபோல் செயல்படுகின்றனர். டெல்லியில் காற்று மாசு ஒருபுறம் மக்களை துன்புறுத்தி கொண்டிருக்க, அதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என கூறி பட்டாசுகளை தவிர்க்க அரசு கேட்டு கொண்டது.
இந்நிலையில், டெல்லி பஜாரில் பொதுமக்கள் பெருமளவில் குவிந்து உள்ளனர். அவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கடைகளில் அலைமோதுகின்றனர். இதனால் கொரோனா வைரசின் 2வது அலை டெல்லியை பாதிக்க கூடிய ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story