மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


மத்திய பிரதேசத்தில் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
x
தினத்தந்தி 10 Nov 2020 8:59 AM IST (Updated: 10 Nov 2020 8:59 AM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் 28 சட்டசபை தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

போபால்,

230 சட்டசபை தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக கட்சியின் முக்கிய தலைவரான ஜோதிர் ஆதித்யா சிந்தியா போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவியில் இருந்து விலகினர். இதையடுத்து, ஜோதிர் ஆதித்யா சிந்தியா தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வில் இணைந்தார். அவர்களை தொடர்ந்து மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர். 

இதனால்,  மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சியை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து ஏற்கனவே காலியாக இருந்த 3 இடங்களைச் சேர்த்து மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீட்க காங்கிரசும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். மத்திய பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களின் பலம் 107 ஆக உள்ளது. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பா.ஜ.க. இன்னும் 9 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டியதுள்ளது. 

அதேபோல், 88 எம்.எல்.ஏ.க்களை தங்கள் கைவசம் வைத்துள்ள காங்கிரஸ் இழந்த ஆட்சியை மீண்டும் பெற போட்டியிடும் 28 தொகுதிகளிலும் வென்றாக வேண்டும் அல்லது குறைந்தது 21 தொகுதிகளில் வெற்றிபெற்று பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று ஆட்சியமைக்கலாம்.

பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்கும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மத்திய பிரதேசம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியுள்ளது. மத்திய பிரதேச இடைத்தேர்தலையும் சேர்த்து நாடு முழுவதும் இன்று 56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story