பீகார் சட்டசபை தேர்தல்: என்.டி.ஏ. முன்னிலை; தொண்டர்கள் சரவெடி போட்டு கொண்டாட்டம்
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ.) முன்னிலை பெற்ற நிலையில் தொண்டர்கள் சரவெடி போட்டு கொண்டாடி வருகின்றனர்.
பாட்னா,
243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கான தேர்தல் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்து முடிந்தது.
71 உறுப்பினர்களுக்கான முதற்கட்ட தேர்தலில் 55.69%, 94 உறுப்பினர்களுக்கான 2-வது கட்ட தேர்தலில் 53.51% மற்றும் 78 தொகுதிகளுக்கு நடந்த 3-வது கட்ட தேர்தலில் 56.12% வாக்குகள் பதிவாகி உள்ளன என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பீகார் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை பலத்த பாதுகாப்புடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முறை வெற்றி பெறும் பட்சத்தில், மீண்டும் நிதிஷ் குமார் தலைமையிலேயே பீகாரில் ஆட்சி அமையும் என ஐக்கிய ஜனதாதள கட்சியுடன் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. கூறியிருந்தது.
இந்த சூழலில் தேர்தல் ஆணையம் மதியம் 1.30 மணியளவில் வெளியிட்ட செய்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி 127 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என அறிவித்து உள்ளது. இவற்றில் பா.ஜ.க.-74, ஜனதா தளம் (ஐ)-48, வி.ஐ.பி.-4, எச்.ஏ.எம்.-1 ஆகிய இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதேபோன்று மகாகட்பந்தன் என்ற மற்றொரு கூட்டணியானது 106 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது என அறிவித்து உள்ளது. இவற்றில் (ராஷ்டீரிய ஜனதா தளம்-66, காங்கிரஸ்-21, இடதுசாரிகள்-19 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதேபோன்று பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும், ஏ.ஐ.எம்.ஐ.எம். 3 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி 1 தொகுதியிலும் மற்றும் சுயேட்சைகள் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தலில் சமீபத்திய முடிவுகளின்படி, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில் பாட்னா நகரில் உள்ள ஐக்கிய ஜனதா தள கட்சியின் அலுவலகத்தில் குவிந்துள்ள தொண்டர்கள் சரவெடி வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story