மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும் - தேவஸ்தான அதிகாரி தகவல்


மண்டல, மகர விளக்கு சீசனில் சபரிமலையில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும் - தேவஸ்தான அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2020 12:24 AM GMT (Updated: 13 Nov 2020 12:24 AM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு சீசனில் படிபூஜை உள்பட அனைத்து வழிபாடுகளும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரி தெரிவித்தார்.

திருவனந்தபுரம், 

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோவில் நடை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் வழக்கமாக நடைபெறும் நெய் அபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்பட பல்வேறு பூஜை, வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டு இருந்தது.

பொதுவாக மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு படி பூஜை நடத்தப்படுவது இல்லை. ஆனால் இந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தினமும் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இதனால் படிபூஜை உள்பட அனைத்து பூஜைகளையும் நடத்தலாமா? என்பது குறித்து தேவஸ்தான நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில் நடப்பு சீசனில் நடைபெறும் பூஜை வழிபாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான மக்கள் தொடர்பு துறை அதிகாரி சுனில் கூறியதாவது:-

நடப்பு சீசனில் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். அத்துடன், மாத பூஜை நாட்களில் ரத்து செய்யப்பட்ட படி பூஜை, புஷ்பாபிஷேகம் உள்பட அனைத்து பூஜைகளும், வழிபாடுகளும் இந்த சீசனில் நடைபெறும்.

சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களின் மருத்துவ வசதிக்காக, நிலக்கல், பம்பை, சன்னிதானம் உள்பட பல்வேறு இடங்களில் மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. சபரிமலைக்கு வரும் கேரள பக்தர்களுக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு மாநில சுகாதார துறை சார்பில் இலவச சிகிச்சை அளிக்கப்படும். மற்ற மாநில பக்தர்கள் சொந்த செலவில் கொரோனா சிகிச்சை பெற வசதி செய்து கொடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாள் இன்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற தீபாராதனைக்கு பின் கோவில் நடை சாத்தப்பட்டது.

இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டு, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

Next Story