இந்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான் பதுங்கு குழிகளில் -வெடிமருந்து கிடங்குகள் அழிப்பு


இந்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தான் பதுங்கு குழிகளில் -வெடிமருந்து கிடங்குகள் அழிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2020 1:13 AM GMT (Updated: 14 Nov 2020 1:13 AM GMT)

இந்திய ஏவுகணை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கு குழிகளில் மற்றும் வெடிமருந்து கிடங்குகளை அழித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டு உள்ளது.

புதுடெல்லி: 

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது,

இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட இந்த உடன்பாட்டை பாகிஸ்தான் ராணுவம் ஒருபோதும் மதிப்பது இல்லை. அங்குள்ள இந்திய ராணுவ நிலைகளையும், மக்கள் வாழும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து அடிக் கடி அத்துமீறிய தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

இந்தியாவுடன் நேரடிப்போரில் ஈடுபட திறன் இல்லாத அந்த நாடு அவ்வப்போது எல்லையில் இத்தகைய சீண்டல்களை செய்து வருகிறது. மேலும் அங்கு பயிற்சி பெற்று காத்திருக்கும் பயங்கரவாதிகளை இந்தியாவின் அமைதியை சீர்குலைப்பதற்காக காஷ்மீருக்குள் ஊடுருவ செய்வதற்காக இந்திய படைகளை திசை திருப்பவும் இத்தகைய தந்திரங்களை அது மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கோழைத்தனமான அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்து உள்ளது. இந்திய எல்லை பகுதிகளை சீண்டுவதும், அதற்கு இந்திய வீரர்கள் கடுமையான பதிலடி கொடுப்பதும் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் அவ்வப்போது பலியாகி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதல்கள் நேற்று எல்லை மீறிப்போனது. அங்கு கடந்த சில நாட்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் தாக்குதல்களை பாகிஸ்தான் நேற்று அரங்கேற்றியது. காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் தொடுத்தது.

அந்தவகையில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார், பந்திப்போரா மாவட்டத்தின் தாவர், குரேஸ் செக்டார், குப்வாரா மாவட்டத்தின் நவ்காம், கெரன் செக்டார்கள், பூஞ்ச் மாவட்டத்தின் ஹாஜிபீர், சவ்ஜியான் செக்டார்கள் என எல்லையோர பகுதிகள் நெடுகிலும் பாகிஸ்தான் தனது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது.

குறிப்பாக எல்லையோரம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் எல்லை பாதுகாப்பு படையின் பெரும்பாலான பிரிவுகள் அனைத்தும் நேற்று காலை முதல் பாகிஸ்தானின் தாக்குதல்களை எதிர்கொண்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலால் எல்லை நெடுகிலும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

இப்படி பாதுகாப்பு படையினரின் நிலைகள் மட்டுமின்றி, எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியது. சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களால் பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த குண்டு மழையால் எல்லைப்புற கிராமங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. இதனால் மக்கள் உயிர் பிழைப்பதற்காக பாதுகாப்பான இடங்களையும், பதுங்கு குழிகளையும் தேடி ஓடினர். இதனால் கிராமங்களில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

பாகிஸ்தானின் இந்த கொடூர தாக்குதலை கண்டு சுதாரிப்பதற்குள் இந்திய எல்லையில் உயிர்ச்சேதமும், படுகாயமும் நிகழ்ந்து விட்டன.

அதன்படி பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் தோவல் (வயது 39) உயிரிழந்தார். அத்துடன் அவருடன் பணியில் இருந்த வீரர் ஒருவரும் பலத்த காயமடைந்தார்.

இதைப்போல உரி, நவ்காம், கெரன் உள்ளிட்ட பகுதிகளில் பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் ஒருவர் ராணுவ கேப்டன் ஆவார். இவர்களை தவிர மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் கிராமப்புறங்களிலும் வெறியாட்டம் போட்டதால், அப்பாவி மக்கள் 6 பேரும் உயிரிழந்தனர். இதில் 3 பேர் கமால்கோட் மற்றும் பால்கோட் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களை தவிர மேலும் 8 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலால் இந்திய வீரர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களைப் போன்ற ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக பதிலடி கொடுக்கப்பட்டது.

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், சிறிய ரக பீரங்கிகள் என நவீன ஆயுதங்கள் மூலம் வலிமையான பதில் தாக்குதலை இந்திய வீரர்கள் அரங்கேற்றினர். இதில் பாகிஸ்தான் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டது.

முக்கியமாக, பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் இந்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இதைத்தவிர அவர்களின் ஏராளமான ஆயுத கிடங்குகள், எண்ணெய் கிடங்குகள் மற்றும் பல்வேறு பயங்கரவாத பயிற்சி தளங்கள் என ஏராளமான உடைமைகளும் நாசமாக்கப்பட்டன.

முன்னதாக பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த தாக்குதலை பயன்படுத்தி, பயங்கரவாதிகள் சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். குப்வாரா மாவட்டத்தின் கெரன் செக்டாரில் நிகழ்ந்த இந்த அத்துமீறல் முயற்சியை இந்திய ராணுவம் தகுந்த நேரத்தில் கண்டுபிடித்து தாக்குதல் நடத்தியது.

இதைத்தொடர்ந்து ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீண்டும் பாகிஸ்தான் பகுதிக்கே திரும்ப சென்றனர்.

பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல் மற்றும் அதற்கு இந்திய வீரர்களின் வலிமையான பதிலடி போன்ற நடவடிக்கைகளால் காஷ்மீர் எல்லையில் நேற்று பெரும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இந்த தாக்குதல்களை தொடர்ந்து எல்லை முழுவதும் இந்திய படைகள் கடும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த ஆண்டு இந்திய மற்றும் பாகிஸ்தான் படைகளுக்கு இடையே மிகவும் தீவிரமான எல்லை தாண்டிய தாக்குதல்கள் நடந்து உள்ளன. 

இந்திய இராணுவம் இதுகுறித்து பதிவிட்டு உள்ள  பல வீடியோக்கள் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் பல பாகிஸ்தான் முகாம்கள் அழிக்கப்பட்டதைக் காட்டுகின்றன.

பாகிஸ்தானிய வெடிமருந்துகள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கட்டிடங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் ஊடுருவ முயற்சிக்க பயங்கரவாதிகளுக்கான ஏவுதளங்கள் ஆகியவை அடங்கி உள்ளன.

மற்றொரு வீடியோவில், இந்திய இராணுவத்தால் சுடப்பட்ட ஒரு டாங்கி எதிர்ப்பு வழிகாட்டும் ஏவுகணை ஒரு பதுங்கு குழியை நோக்கி பறக்கும்போது ஒரு பாகிஸ்தான் சிப்பாய் பாதுகாப்பிற்காக வேகமாக ஓடுவதைக் காண முடிகிறது. சில நொடிகளில், இந்திய இராணுவத்தால் ஏவப்பட்ட மேலும் இரண்டு ஏவுகணைகள் ஒரே பதுங்கு குழியைத் தாக்கின.

கெரான் துறையிலிருந்து சில பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றபோது பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. ஊடுருவல் முயற்சியை இந்திய படைகள் தடுத்து நிறுத்தியதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இது ஒரு வாரத்திற்குள் இரண்டாவது ஊடுருவல் முயற்சியாகும் நவம்பர் 7-8 அன்று மச்சால் பகுதியில் ஊடுருவல் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.




Next Story