தீபாவளி கொண்டாட்டம்: உலக தலைவர்கள் வாழ்த்து!


தீபாவளி கொண்டாட்டம்: உலக தலைவர்கள் வாழ்த்து!
x
தினத்தந்தி 14 Nov 2020 1:16 PM IST (Updated: 14 Nov 2020 1:16 PM IST)
t-max-icont-min-icon

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி


நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதேபோல் உலக தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு மத்தியில் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்த ஆண்டு தீபாவளிக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும், ‘இந்த ஆண்டு இருளில் இருந்தது. தற்போது தீபாவளியால் வரும் ஒளி அந்த இருளை விலக்குகிறது. புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. இது பலவிதமான மக்களுக்கு மிக முக்கியமான, மகிழ்ச்சியான தருணமாக இருக்கும்’ என கூறியுள்ளார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது வாழ்த்து செய்தியில், ‘கடவுள் ராமர், ராவணனை வென்று சீதாவை அழைத்து வந்தது போல, இருளை தோற்கடித்து ஒளியை பரப்பியதற்கான வெற்றியாக இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதேபோல் கொரோனாவில் இருந்து மீண்டு வருவோம் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் வெளியிட்டு உள்ள செய்தியில் விளக்குகள் திருவிழாவான தீபாவளியன்று உலகெங்கிலும் கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் அவர்கள் தொடர்ந்து செழிப்பையும் முன்னேற்றத்தையும் அடைய வாழ்த்துகிறோம் என கூறி உள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காணொலி காட்சி வாயிலாக தீபாவளியை கொண்டாடினார். தனது அலுவலக அறையில் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடிய ட்ரூடோவுடன் கனடாவில் அரசியல் தலைவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக இணைந்து தீபாவளியை கொண்டாடினர். 

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ருடோ, ' உண்மை, ஒளி மற்றும் நன்மை எப்போதும் மேலோங்கும் என்பதை தீபாவளி நமக்கு நினைவூட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த முக்கியமான திருவிழாவை குறிப்பதற்காக தான் காணொலி கொண்டாட்டத்தில் இணைந்ததாக கூறிய ட்ரூடோ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.


Next Story