காஷ்மீர் எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு ராணுவம் இறுதி அஞ்சலி


காஷ்மீர் எல்லையில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்களுக்கு ராணுவம் இறுதி அஞ்சலி
x
தினத்தந்தி 15 Nov 2020 5:03 PM IST (Updated: 15 Nov 2020 5:03 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் எல்லையில் உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் உடல்களுக்கு ராணுவம் இறுதி அஞ்சலி செலுத்தியது.

புதுடெல்லி,

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சர்வதேச எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது.

இரு நாடுகளும் ஏற்றுக்கொண்ட இந்த உடன்பாட்டை பாகிஸ்தான் ராணுவம் ஒருபோதும் மதிப்பது இல்லை. அங்குள்ள இந்திய ராணுவ நிலைகளையும், மக்கள் வாழும் எல்லையோர கிராமங்களையும் குறிவைத்து அடிக் கடி அத்துமீறிய தாக்குதல்களை தொடுத்து வருகிறது.

இந்திய எல்லை பகுதிகளை சீண்டுவதும், அதற்கு இந்திய வீரர்கள் கடுமையான பதிலடி கொடுப்பதும் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது. இதில் இந்திய வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் அவ்வப்போது பலியாகி வருகின்றனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதல்கள் நேற்று முன் தினம் எல்லை மீறிப்போனது.

காஷ்மீரின் எல்லையோர மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் தாக்குதல் தொடுத்தது.

அந்தவகையில் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டார், பந்திப்போரா மாவட்டத்தின் தாவர், குரேஸ் செக்டார், குப்வாரா மாவட்டத்தின் நவ்காம், கெரன் செக்டார்கள், பூஞ்ச் மாவட்டத்தின் ஹாஜிபீர், சவ்ஜியான் செக்டார்கள் என எல்லையோர பகுதிகள் நெடுகிலும் பாகிஸ்தான் தனது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டது.

குறிப்பாக எல்லையோரம் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வரும் எல்லை பாதுகாப்பு படையின் பெரும்பாலான பிரிவுகள் அனைத்தும் நேற்று காலை முதல் பாகிஸ்தானின் தாக்குதல்களை எதிர்கொண்டன. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலால் எல்லை நெடுகிலும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

இப்படி பாதுகாப்பு படையினரின் நிலைகள் மட்டுமின்றி, எல்லையோர கிராமங்களை குறிவைத்தும் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி குண்டுகளை வீசியது. சிறிய ரக பீரங்கிகள் உள்ளிட்ட கடுமையான ஆயுதங்களால் பாகிஸ்தான் வீரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த குண்டு மழையால் எல்லைப்புற கிராமங்களில் உள்ள வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பலத்த சேதமடைந்தன. இதனால் மக்கள் உயிர் பிழைப்பதற்காக பாதுகாப்பான இடங்களையும், பதுங்கு குழிகளையும் தேடி ஓடினர். இதனால் கிராமங்களில் பெரும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

பாகிஸ்தானின் இந்த கொடூர தாக்குதலை கண்டு சுதாரிப்பதற்குள் இந்திய எல்லையில் உயிர்ச்சேதமும், படுகாயமும் நிகழ்ந்து விட்டன.

அதன்படி பாரமுல்லா மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் தோவல் (வயது 39) உயிரிழந்தார். அத்துடன் அவருடன் பணியில் இருந்த வீரர் ஒருவரும் பலத்த காயமடைந்தார்.

இதைப்போல உரி, நவ்காம், கெரன் உள்ளிட்ட பகுதிகளில் பணியில் இருந்த 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் ஒருவர் ராணுவ கேப்டன் ஆவார். இவர்களை தவிர மேலும் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் ராணுவம் கிராமப்புறங்களிலும் வெறியாட்டம் போட்டதால், அப்பாவி மக்கள் 6 பேரும் உயிரிழந்தனர். இதில் 3 பேர் கமால்கோட் மற்றும் பால்கோட் பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இவர்களை தவிர மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த திடீர் தாக்குதலால் இந்திய வீரர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களைப் போன்ற ஆயுதங்கள் கொண்டு சரமாரியாக பதிலடி கொடுக்கப்பட்டது.

பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள், சிறிய ரக பீரங்கிகள் என நவீன ஆயுதங்கள் மூலம் வலிமையான பதில் தாக்குதலை இந்திய வீரர்கள் அரங்கேற்றினர். இதில் பாகிஸ்தான் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டது.

முக்கியமாக, பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் இந்திய தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு சினார் கார்ப்ஸ் ராணுவம் இறுதி அஞ்சலி செலுத்தியது.

இதுகுறித்து ராணுவ வட்டாரத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நவம்பர் 13 அன்று பாகிஸ்தானின் போர்நிறுத்த மீறலை எதிர்கொள்வதற்காக யூரி செக்டரில் நிறுத்தப்பட்ட பீரங்கி படைப்பிரிவின் மறைந்த ஹவில்தார் ஹர்தன் சந்திர ராய் மற்றும் பீரங்கி படைப்பிரிவின் மறைந்த கன்னர் சுபோத் கோஷ் ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.

குரேஸ் செக்டரில் நிறுத்தப்பட்ட மறைந்த நாயக் சதாய் பூஷண் ராமேஸ்ராவ் மற்றும் மராட்டிய லைட் காலாட்படையின் மறைந்த ராணுவ வீரர் ஜொண்டலே ருஷிகேஷ் ராம்சந்திரா ஆகியோரும் எதிர்பாராத நிலையில் வீரமரணம் அடைந்தனர்.

உயிர்த்தியாகம் புரிந்த வீரர்களின் உடல்களுக்கு இந்திய ராணுவம் இன்று அஞ்சலி செலுத்தியது.

பாகிஸ்தான் ராணுவத்தால் தூண்டப்படாத பீரங்கி தாக்குதல்களை எதிர்கொண்ட துணிச்சல்மிக்க இந்த வீரர்கள் பல்வேறு பிளவு காயங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அருகிலுள்ள ராணுவ மருத்துவ நிலையங்களுக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டபோது துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே அவர்கள் உயிர்பிரிந்தது.

நாவுகம் செக்டரில் நடந்த பாகிஸ்தான் போர்நிறுத்த மீறலின் போது வீரமரணம் அடைந்த எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) உதவி ஆய்வாளர் ராகேஷ் தோவலின் தியாகத்தையும் சினார் கார்ப்ஸ் ராணுவம் நினைவுகூர்கிறது.

இந்த சோகமான தருணத்தில், மறைந்த ராணுவ வீரர்களின் துயரம் மிகுந்த குடும்பங்களுடன் ஒன்றிணைந்து நிற்கிறது, மேலும் அவர்களின் கவுரவத்திற்கும் நல்வாழ்விற்கும் துணைநிற்க ராணுவம் உறுதி பூண்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story