பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்


பீகார் மாநில முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று பதவி ஏற்பு தொடர்ந்து 4-வது முறையாக ஆட்சி அமைக்கிறார்
x
தினத்தந்தி 16 Nov 2020 6:00 AM IST (Updated: 16 Nov 2020 1:27 AM IST)
t-max-icont-min-icon

பீகாரில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில், 243 இடங்களைக்கொண்ட சட்டசபைக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது.

பாட்னா, 

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 10-ந் தேதி எண்ணப்பட்டன.

இதில் மூத்த தலைவரும், முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி, இளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணியை விட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை தக்க வைத்தது.

இந்த கூட்டணி 125 இடங்களை (பா.ஜ.க. 74, ஐக்கிய ஜனதாதளம் 43, வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4) கைப்பற்றியது.

ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணி 110 இடங்களில் (ராஷ்ட்ரீய ஜனதாதளம் 75, காங்கிரஸ் 19, கம்யூனிஸ்டுகள் 16) வெற்றி பெற்றது.

பா.ஜ.க. மேலிடம் திட்டவட்டம்

இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதாதளத்தைவிட பா.ஜ.க., அதிக இடங்களை கைப்பற்றியதால், ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவரான நிதிஷ்குமார் தலைமையில் புதிய அரசு அமைக்க அந்த கட்சி ஒப்புக்கொள்ளுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் ஏற்கனவே எடுத்த முடிவில் பா.ஜ.க. தலைமை உறுதியாக இருந்தது. நிதிஷ்குமார் தலைமையில்தான் புதிய அரசு அமையும் என்று பா.ஜ.க. தலைமை திட்டவட்டமாக தெரிவித்தது. இது நிதிஷ்குமாரை நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தது.

முதல்-மந்திரி தேர்வு

இந்த நிலையில், பா.ஜ.க. கூட்டணியின் புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம், பாட்னாவில் எண்.1, அன்னி மார் என்ற முகவரியில் அமைந்துள்ள முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் அதிகாரபூர்வ இல்லத்தில் நேற்று மதியம் 12.30 மணிக்கு நடந்தது.

பா.ஜ.க. மூத்த தலைவரும், ராணுவ மந்திரியுமான ராஜ்நாத் சிங் மேலிட பார்வையாளராக கலந்து கொண்டார். பா.ஜ.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபை பா.ஜ.க. கூட்டணி தலைவராக (முதல்-மந்திரியாக) நிதிஷ்குமார் (வயது 69) ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை ராஜ்நாத் சிங் அறிவித்தார்.

கவர்னருடன் சந்திப்பு

அதைத் தொடர்ந்து பாட்னாவில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நிதிஷ்குமார் சென்றார். கவர்னர் பாகு சவுகானை சந்தித்தார். அவரிடம் சட்டசபை பா.ஜ.க. கூட்டணி தலைவராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அவர் தெரிவித்தார். புதிய அரசு அமைப்பதற்கு முறைப்படி உரிமை கோரினார்.

அதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சட்டசபை பா.ஜ.க. கூட்டணியின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்ததற்கான கடிதத்தை கவர்னரை சந்தித்து அளித்தேன். கூட்டணி கட்சிகளின் ஆதரவு கடிதங்களையும் கவர்னரிடம் கொடுத்தேன். அதைத் தொடர்ந்து நான் அடுத்த முதல்-மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளேன்.

மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணியின் புதிய அரசை அமைக்குமாறு கவர்னர் எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். பதவி ஏற்பு விழா நாளை (இன்று) மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் நடைபெறும்.

புதிய மந்திரிசபை பட்டியலை விரைவில் கவர்னருக்கு அனுப்புவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அடுத்த துணை முதல்-மந்திரி யார் என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு நிதிஷ்குமார் பதில் அளிக்க மறுத்து விட்டார். யார் புதிய சபாநாயகர் என கேள்வி கேட்டதற்கு இது தொடர்பாக பா.ஜ.க. தலைவர்களுடனும், கூட்டணி கட்சி தலைவர்களுடனும் இன்னும் விவாதிக்கவில்லை என்று பதில் அளித்தார்.

பா.ஜ.க. தலைவர் தேர்வு

இதற்கு மத்தியில் சட்டசபை பா.ஜ.க. புதிய எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. தலைவராக தர்கிஷோர் பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக ரேணுதேவி தேர்வு பெற்றார்.

இதுவரை சட்டசபை பா.ஜ.க. தலைவர் பதவி வகித்து வந்த சுஷில்குமார் மோடிதான், தர்கிஷோர் பிரசாத் பெயரை புதிய தலைவர் பதவிக்கு முன்மொழிந்தார். இந்த தேர்வில் பார்வையாளர்களாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பூபேந்திர யாதவ், தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டனர்.

சட்டசபை பா.ஜ.க. தலைவராக தேர்வு பெற்றுள்ளதால், புதிய துணை முதல்-மந்திரியாக சுஷில்குமார் மோடிக்கு பதிலாக தர்கிஷோர் பிரசாத் பதவி ஏற்பார் என தெரிகிறது.

இதையொட்டி சுஷில்குமார் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில், “பா.ஜ.க. தொண்டர் என்ற பதவியை யாரும் என்னிடம் இருந்து பறித்து விட முடியாது. எனது 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் பிறர் பெற முடியாத அளவுக்கு பா.ஜ.க.வும், ஜனசங்கமும் எனக்கு நிறைய கொடுத்துள்ளன. எனக்கு அளிக்கப்படுகிற பொறுப்பை நான் நிறைவேற்றுவேன்” என கூறி உள்ளார்.

மந்திரிசபை பதவி ஏற்பு விழா

பீகார் மாநிலத்தின் 37-வது முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் இன்று மாலை பதவி ஏற்கிறார்.

அவருக்கும், அவரது மந்திரிசபையில் இடம்பெறுகிற பிற மந்திரிகளுக்கும் கவர்னர் பாகு சவுகான் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

Next Story