கேரள தங்க கடத்தல் வழக்கு; என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை


கேரள தங்க கடத்தல் வழக்கு; என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 இடங்களில் சோதனை
x
தினத்தந்தி 20 Nov 2020 2:02 PM GMT (Updated: 20 Nov 2020 2:02 PM GMT)

கேரள தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மலப்புரம்,

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரியின் பேரில் கடந்த ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில், சந்தேகத்தின்பேரில் சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.  இதில், அன்றைய மதிப்பில் ரூ.14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் மறைத்து வைத்து, கடத்தப்பட்டிருந்தது தெரிய வந்தது.

நாடு முழுவதும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த வழக்கில் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தூதரக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேசுக்கு இதில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.  இதனை தொடர்ந்து தப்பியோடிய அவரையும், சந்தீப் நாயர் என்பவரையும் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.  இதுவரை 21 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இந்த வழக்கை அமலாக்க துறை மற்றும் சுங்க துறை அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.  இந்த வழக்கில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கர் என்பவருக்கும் தொடர்பு உள்ளது என குற்றச்சாட்டு எழுந்தது.  இதனை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.  அவர்களில் 10 பேருக்கு நீதிமன்றம் கடந்த அக்டோபரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  3 பேரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மலப்புரம் மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.  இதன்படி, முகமது அஸ்லாம், அப்துல் லத்தீப், நஸருதீன் ஷா, ரம்ஜான் பி மற்றும் முகமது மன்சூர் ஆகிய 5 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த 5 பேரும், தங்க கடத்தல் வழக்கில் முன்பே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள்.  அவர்களுடன் சேர்ந்து அமீரக தூதரக முகவரி பேரில் வரும் இறக்குமதி சரக்குகளின் வழியே தங்க கடத்தலை தொடர்ந்து செய்து வந்துள்ளனர்.

இந்த சோதனையில், பல்வேறு மின்னணு பொருட்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Next Story