ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பாஜக முயற்சி எடுக்க வேண்டும், அதன்பிறகு கராச்சியை பார்க்கலாம்: சிவசேனா


ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பாஜக முயற்சி எடுக்க வேண்டும், அதன்பிறகு கராச்சியை பார்க்கலாம்: சிவசேனா
x
தினத்தந்தி 23 Nov 2020 8:08 PM GMT (Updated: 23 Nov 2020 8:08 PM GMT)

கராச்சி ஒரு நாள் இந்தியாவின் அங்கமாக மாறும் என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறிய கருத்துக்கு சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது.

மும்பை, 

கராச்சி ஒரு நாள் இந்தியாவின் அங்கமாக மாறும் என்று பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறிய கருத்துக்கு சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது.

மும்பை பாந்திராவில் உள்ள ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ என்ற இனிப்பு கடையின் பெயருக்கு சிவசேனா பிரமுகர் ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார். ‘கராச்சி’ என்ற பெயரை மாற்றுமாறும் கடையின் உரிமையாளரை அவர் வலியுறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளரான சஞ்சய் ராவத், “பெயர் மாற்றக்கூறியது கட்சியின் கோரிக்கை அல்ல. ‘கராச்சி ஸ்வீட்ஸ்’ 60 ஆண்டுகளாக மும்பையில் செயல்பட்டு வருகிறது” என்றார்.

இந்த பிரச்சினை குறித்து பா.ஜனதா தலைவரும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான தேவேந்திர பட்னாவிசிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-

நாங்கள் அகண்ட பாரதம் (பிரிக்கப்படாத இந்தியா) மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒரு நாள் பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் என்று நம்புகிறோம். அதற்கான நேரம் நிச்சயம் வரப்போகிறது. லவ் ஜிகாத்தை முடிவுக்கு கொண்டுவர உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் முயற்சியை வரவேற்கிறேன்.இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

தேவேந்திர பட்னாவிசின் இந்த கருத்துக்கு சிவசேனா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், “கராச்சி இந்தியாவின் ஒரு பகுதியாக மாறுவதை சிவசேனா வரவேற்கிறது. அதற்கு முன்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க பா.ஜனதா முயற்சி எடுக்க வேண்டும். அதன்பிறகு கராச்சியை பார்க்கலாம்” என்று பதிலளித்தார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், மராட்டிய மந்திரியுமான நவாப் மாலிக் கூறுகையில், “இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளை ஒன்றிணைத்து ஒரே நாட்டை உருவாக்க பா.ஜனதா விரும்பினால், அதை எங்களது கட்சி வரவேற்கும்” என்று கிண்டலாக தெரிவித்தார்.

Next Story