சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி


சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி
x
தினத்தந்தி 8 Dec 2020 11:29 AM IST (Updated: 8 Dec 2020 3:09 PM IST)
t-max-icont-min-icon

சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

புதுடெல்லி,

சென்னை-சேலம் இடையிலான 8 வழி பசுமை சாலை அமைக்கும் திட்டம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ந் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக கடந்த அக்டோபர் 1-ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை-சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலை திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் சுற்றுச்சுழல் அனுமதி தேவை. ஆனால், நிலங்களை கையகப்படுத்தினால்தான் சுற்றுச்சுழல் அனுமதியை கோர முடியும். 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையின்படி, நிலத்தை கையகப்படுத்த சூழல் முன் அனுமதி தேவையில்லை என வாதிட்டார்.

எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், சென்னை-சேலம் பசுமைச் சாலை திட்ட சாத்தியக்கூறுகளுக்கான அறிக்கையில் குறைபாடுகள் உள்ளதை சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பில் பதிவு செய்துள்ளது. இதுபோன்ற அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் முன் அனுமதி பெற வேண்டும். திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது சரி என வாதிட்டனர்.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மேல்முறையீடு தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங் களை எதிர்மனுதாரர்கள் ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவற்றுக்கான விளக்க மனுவை மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி சென்னை-சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. அதன்படி புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு நிலங்களை மீண்டும் கையகப்படுத்தலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Next Story