விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி: இன்று சந்திப்பு நடைபெறாது
விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் அமித்ஷா நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்று சந்திப்பு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
விவசாயிகளின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையாக நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருந்தார்.
இதன்படி நேற்று இரவு 8 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சந்தித்து பேசினார்.
அமித்ஷா உடனான இந்த சந்திப்பில் பஞ்சாபை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் 8 பேர் உள்பட மொத்தம் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் 13 பேர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து அனைத்திந்திய விவசாய சபையின் பொது செயலாளர் ஹன்னன் மொல்லா செய்தியாளர்களிடம், “ விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறாது. விவசாய தலைவர்களிடம் அரசின் முன்மொழிவு ஒன்று இன்று வழங்கப்படும் என எங்களிடம் மத்திய மந்திரி கூறினார். அரசின் முன்மொழிவை பற்றி விவசாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்துவார்கள். மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெற தயாராக இல்லை. டெல்லி மற்றும் அரியானாவின் சிங்கு எல்லை பகுதியில் பகல் 12 மணியளவில் இன்று விவசாயிகளிடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என அவர் கூறினார். விவசாயிகளுடனான பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு அதில் முன்னேற்றம் எட்டப்படாத நிலையில், மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடனான 6-ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று (புதன்கிழமை) நடைபெற இருந்தது.
Related Tags :
Next Story