கேரளாவில் கொரோனாவுக்கு இலவச தடுப்பு மருந்து: நிதி மந்திரி டுவிட்டர் பதிவு
கேரளாவில் கொரோனா தடுப்பு மருந்து இலவச அடிப்படையில் வழங்கப்படும் என மாநில நிதி மந்திரி கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் பெருந்தொற்றாக உருவெடுத்துள்ள கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டறியும் பணி நடந்து வருகிறது. இதில் பலகட்ட பரிசோதனைகளில் முன்னேற்றம் காணப்பட்டு உள்ளது.
நாட்டில் முதன்முறையாக கேரளாவில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு, சிகிச்சைக்கு பின்னர் குணமடைய செய்யப்பட்டது. அதன்பின் பெரிய அளவில் பாதிப்புகள் காணப்படவில்லை. எனினும், ஓணம் பண்டிகைக்கு பின்னர் கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சமீபத்தில் புதிய வகை மலேரியா நோய் ஒன்று வெளிநாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்த ராணுவ வீரருக்கு இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து சரி செய்யப்பட்டது. இதனை கேரள சுகாதார மந்திரி சைலஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், கேரள நிதி மந்திரி தாமஸ் ஐசக் இன்று கூறும்பொழுது, கொரோனா தடுப்பு மருந்து கிடைப்பது முடிவானதும் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் விலையின்றி இலவச அடிப்படையில் வழங்கப்படும் என கூறினார்.
பெரியம்மை ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து போலியோ ஒழிப்பு வரை இந்தியாவில் இலவச தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்துக்காக மட்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஏன் தயக்கம் காட்டி வருகிறது? என கேள்வி எழுப்பினார்.
கேரளாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கொரோனா இலவச தடுப்பு மருந்து கிடைக்கும் என முதல் மந்திரி பினராயி விஜயன் அறிவித்துள்ளார் என்றும் அவர் டுவிட்டரில் கூறியுள்ளார்.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நேரத்தில் நிதி மந்திரி ஐசக் இந்த டுவிட்டர் பதிவை வெளியிட்டு உள்ளார். இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
Related Tags :
Next Story