சீன படைகளுடன் இந்திய ராணுவம் துணிச்சலுடனும், வலிமையுடனும் போரிட்டது - ராஜ்நாத்சிங் பேச்சு


சீன படைகளுடன் இந்திய ராணுவம் துணிச்சலுடனும், வலிமையுடனும் போரிட்டது - ராஜ்நாத்சிங் பேச்சு
x
தினத்தந்தி 15 Dec 2020 6:47 AM IST (Updated: 15 Dec 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

லடாக் எல்லையில் இந்திய ராணுவம் துணிச்சலுடன் போரிட்டு சீன படைகளை பின்வாங்க செய்தது என்று ராஜ்நாத்சிங் கூறினார்.

புதுடெல்லி,

தொழில் கூட்டமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ.யின் கூட்டத்தில் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு நாட்டுக்கும் தனக்காக துணிச்சலாக நின்று, சவால்களை முறியடித்து வெற்றி பெறும் சூழ்நிலை வரும். சமீபத்தில், லடாக் எல்லையில் அத்தகைய சூழ்நிலை வந்தது. சீன படைகளுடன் இந்திய ராணுவம் மிகுந்த துணிச்சலுடனும், வலிமையுடனும் போரிட்டது. சீன படைகளை பின்வாங்க செய்தது. இந்திய ராணுவம் இப்போது சாதித்ததற்கு எதிர்கால சமுதாயம் பெருமைப்படும்.

இந்த கொரோனா காலத்திலும் நமது படைகள் எல்லையை துணிச்சலாக காவல் காத்து வருகின்றன. எந்த வைரசும் அவர்களை தடுக்க முடியாது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது. முன்பு இந்தியாவை யாரும் ஆதரிக்காததால், இந்தியா தனியாகவே போரிட்டது. ஆனால், பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் பாகிஸ்தான் என்று இப்போது உலக நாடுகள் ஏற்கும்படி இந்தியா செய்துள்ளது.

எல்லை கோட்டில் பிரச்சினை எழும்போதெல்லாம், சீன ராணுவத்தின் வலிமையும், இந்திய ராணுவத்தின் வலிமையும் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. அதைப்பற்றி நான் விரிவாக குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், கலாசார வலிமையை பொறுத்தவரை, சீனாவை விட இந்தியா ஒரு படி முன்னால் உள்ளது. கிழக்கு ஆசியாவில் மியான்மரில் இருந்து தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா, ஜப்பான் வரை இந்திய கலாசாரத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. சீனாவில் கூட புத்த மதத்தின் தாக்கம் உள்ளது.

ராணுவத்துக்கு நவீன தொழில்நுட்பங்களை கொண்டு சேர்ப்பதில் தொழில்துறை துணை நிற்க வேண்டும். கொரோனாவால் நமது விவசாயம் பாதிக்கப்படவில்லை. தானிய கிடங்குகள் நிரம்பி விட்டன.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story