தமிழகம் போல் குஜராத்தில் சம்பவம்: சுங்க இலாகா பறிமுதல் செய்த ரூ.1.1 கோடி தங்கம் மாயம்

தமிழகத்தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயம் ஆனது போல் குஜராத்தில் சுங்க இலாகா பறிமுதல் செய்த ரூ.1.1 கோடி தங்கம் காணாமல் போயுள்ளது.
ராஜ்கோட்,
குஜராத்தில் கடந்த 1971ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை பூஜ் சுங்க இலாகா பிரிவினர் கடத்தல் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றை பல்வேறு சோதனைகளில் பறிமுதல் செய்தனர். இதன்பின்னர், கைப்பற்றப்பட்ட இந்த பொருட்கள் அனைத்தும் பூஜ் நகரில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
கடந்த 2001ம் ஆண்டு பூஜ் நகரில் நடந்த நிலநடுக்கத்தின் தொடர்ச்சியாக பூஜ் சுங்க இலாகா அலுவலக கட்டிடம் சேதமடைந்தது. இதனால் அந்த அலுவலகத்தில் இருந்து 3.149 கிலோ எடை கொண்ட தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்டவை ஜாம்நகர் சுங்க இலாகாவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இதன்பின்பு கடந்த 2016ம் ஆண்டு பூஜ் சுங்க இலாகாவுக்கு இவற்றை மீண்டும் கொண்டு செல்வதற்கு முன் இரு மண்டல அதிகாரிகள் முன்னிலையில் சூட்கேசுகளில் இருந்த சீல்கள் திறக்கப்பட்டன. ஆனால், அவற்றில் 2.156 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளது. இவை கடந்த 1982ம் ஆண்டு முதல் 1986ம் ஆண்டு வரையில் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டவை ஆகும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சம்பவம் நடந்தபோதிலும், ஜாம்நகர் சுங்க துறையை சேர்ந்த ஆய்வாளர் ராம்சிங் யாதவ் என்பவர் இதுபற்றி நேற்று புகார் செய்து எப்.ஐ.ஆர். பதிவானது.
நடப்பு சந்தை மதிப்பின்படி இவை ரூ.1.10 கோடி மதிப்பிலானவை என கணக்கிடப்பட்டு உள்ளது. குஜராத் தலைமை கமிஷனர் உத்தரவின்பேரிலேயே முறைப்படி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சி.பி.ஐ. பறிமுதல் செய்த 100 கிலோ தங்கம் மாயம் ஆனது போல் குஜராத்தில் சுங்க இலாகா பறிமுதல் செய்த ரூ.1.1 கோடி தங்கம் காணாமல் போயுள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையில் உள்ள தங்கம் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தை சி.பி.ஐ. பறிமுதல் செய்த வழக்கில், 103.864 கிலோ தங்கம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது.
வங்கிகளில், தனியார் நிறுவனம் வாங்கிய ரூ.1,160 கோடி கடன் தொகை வசூலுக்காக, வங்கிகள் சார்பில் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராமசுப்பிரமணியம் என்பவர் இதுபற்றி சிறப்பு ஐகோர்ட்டில் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், வங்கிகளின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்ய வேண்டும் என்றும், இந்த புகார் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீஸ் சூப்பிரண்டு பதவிக்கு குறையாத அதிகாரி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இவரது புலன் விசாரணைக்கு, சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழக்குப்பதிவு செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story