புதிய கொரோனா வைரஸ், தடுப்பூசி திறனை பாதிக்காது: மத்திய அரசு அறிவிப்பு


புதிய கொரோனா வைரஸ், தடுப்பூசி திறனை பாதிக்காது:  மத்திய அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Dec 2020 11:04 PM GMT (Updated: 22 Dec 2020 11:04 PM GMT)

இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதுவகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளின் திறனை பாதிக்காது என்று மத்திய அரசு கூறுகிறது.

புதுடெல்லி,

இங்கிலாந்தில் உருமாறி உருவானதாக கூறப்படுகிற ‘வி.யு.ஐ. 202012/01’ கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. எனவே அங்கு இதுவரை இல்லாத வகையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளுக்குள் அடைந்து கிடக்கிற நிலை உருவாகி உள்ளது.

இந்த தருணத்தில் புதிய வைரஸ், தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுமா, தடுப்பூசிகளின் செயல்திறன் பாதிக்கப்படுமா என்பது போன்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

இதையொட்டி மத்திய அரசின் சார்பில் நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே. பால், டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

இப்போதைக்கு நாங்கள் நடத்தியுள்ள விவாதங்கள், கிடைத்துள்ள தரவுகளின் புரிதல்கள், எங்கள் ஆழமான மதிப்பீடுகள் ஆகியவற்றின் அடிப்படையில், யாரும் பீதி அடைய அவசியம் இல்லை.

இந்த புதிய சவால் காரணமாக, நாங்கள் எங்கள் விரிவான முயற்சிகளை எதிர்கொள்ள வேண்டும். நாங்கள் மரபணு வரிசையை அடக்கினால், நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்,

கொரோனா வைரசின் இந்த உருமாற்றத்தால், சிகிச்சை வழிகாட்டுதல்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது உருவாக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளின் செயல்திறனில் இந்த புதிய வகை கொரோனா பாதிப்பை ஏற்படுத்தாது.  கொரோனா வைரசில் ஏற்பட்டுள்ள உருமாற்றம், இந்த தொற்றுநோயை எளிதில் மக்களிடம் பரவச்செய்யும்.

இந்த புதிய வகை வைரஸ் பரவும் தன்மை 70 சதவீதம் அதிகரித்து உள்ளது, ஒரு விதத்தில் இவை ‘சூப்பர் ஸ்பிரெடர்’ என்று சொல்லத்தக்க விதத்தில் அதிவேகமாக பரவச்செய்யும். அதே நேரத்தில் மரணத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதிகரிக்காது. ஆஸ்பத்திரி சேர்க்கை, நோயின் தீவிரம் போன்றவற்றையும் அதிகரிக்காது.

எனவே பீதி அடையத்தேவையில்லை. நமது நாட்டில் இன்னும் அந்த வைரஸ் கண்டறியப்படவில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.  கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டம், இந்தியாவில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூ‌ஷண் கூறும்போது, ‘‘செப்டம்பர் மத்தியில் இருந்து இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. கடந்த 7 நாட்களில் 10 லட்சம் பேரில் 124 பேருக்கு பாதிப்பு என்ற அளவில் இருக்கிறது. இந்த எண்ணிக்கை உலகளவில் 588 ஆக இருக்கிறது. இதே போன்று கடந்த 7 நாட்களில் இறப்புவிகிதம் 10 லட்சம் பேருக்கு 2 என்ற அளவில் உள்ளது. உலகளவில் இந்த எண்ணிக்கை 10 ஆக இருக்கிறது’’ என குறிப்பிட்டார்.


Next Story