விவசாயிகள் போராட்டம்: இந்திய ரெயில்வேக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடி இழப்பு

விவசாயிகள் போராட்டத்தினால் இந்திய ரெயில்வேக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில், மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களிடம் அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகள் பலனற்று போனதுடன், 6வது சுற்று பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இதனால், வேளாண் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசு முன்வந்தது.
ஆனால், விவசாயிகள் அதனை ஏற்க மறுத்து விட்டனர். சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று அரசை அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் எதிரொலியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இதேபோன்று ரெயில்வே போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது. இதனால், ரெயில்வே துறைக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதுபற்றி வடக்கு ரெயில்வே பொது மேலாளர் அசுதோஷ் கங்கல் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, ரெயில்வேயில் பியாஸ் மற்றும் அமிர்தசரஸ் நகரங்களுக்கு இடையேயான ஒரு பிரிவு போக்குவரத்து முடக்கப்பட்டு உள்ளது.
அதனால், தரன்தரன் மாவட்டம் வழியே செல்லும் வகையில் மாற்று வழியை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். ஆனால், தேவையான பல ரெயில்களை எங்களால் இயக்க முடியவில்லை.
நாங்கள் இரண்டு ரெயில்களை ரத்து செய்து விட்டோம். 3 ரெயில்களை குறைந்த தொலைவுடன் நிறுத்தி விட்டோம். 7 ரெயில்களை தான்தரன் நோக்கி செல்லும் வகையில் திருப்பி விட்டுள்ளோம்.
விவசாயிகளின் போராட்டத்தினால் சரக்கு ரெயில்களின் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. அவை வேறு வழியில் திருப்பி விடப்பட்டு உள்ளன. இதனால், அந்த ரெயில்கள் நீண்ட பயண நேரம் எடுத்து கொள்கிறது.
இவற்றின் தொடர்ச்சியாக வடக்கு ரெயில்வேக்கு ரூ.2 ஆயிரத்து 400 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது என மதிப்பிடப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story