‘போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றுகிறார்' பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றச்சாட்டு


‘போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றுகிறார் பினராயி விஜயன் மீது எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Dec 2020 12:48 AM GMT (Updated: 26 Dec 2020 12:48 AM GMT)

‘போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை ஏமாற்றுகிறார்' என்று முதல்-மந்திரி மீது எதிர்க்கட்சி தலைவர் குற்றம் சாட்டினார்.

பெரும்பாவூர்,

கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், கடந்த ஓணம் பண்டிகையின்போது அடுத்த 100 நாட்களில் அரசு செய்து முடிக்க வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். தற்போது 2-வது முறையாக அடுத்த 100 நாட்களில் செய்து முடிக்க வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து அறிவித்து உள்ளார். இது தொடர்பாக கேரள சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். 

அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி பினராயி விஜயன் மீண்டும் 100 நாட்கள் நிறைவேற்றப்பட உள்ள செயல்திட்டங்கள் குறித்து அறிவித்து உள்ளார். இது முற்றிலும் மக்களை ஏமாற்றும் முயற்சி ஆகும். கடந்த முறை அறிவித்த செயல்திட்டங்கள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் தற்போது மீண்டும் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த முறை அறிவித்த செயல்திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக அவர் கூறுகிறார். ஆனால் அது உண்மை இல்லை. இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயல் போன்றது. அதில் எந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது?, அதனால் என்ன பலன் கிடைத்து உள்ளது?, அதில் பயன் அடைந்தவர்கள் யார்? என்ற விவரத்தை வெளியிட முதல்-மந்திரி தயாரா என்பது எனது கேள்வி.

தற்போது மேலும் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, 5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி, ஒரு நாளைக்கு ஒரு எந்திரத்தில் இயங்கும் கயிறு தொழிற்சாலை போன்ற அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். கடந்த முறையும் இதுபோன்று 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு தரப்போவதாக அறிவித்தார். ஆனால் ஒருவருக்கு கூட இதுவரை வேலை கிடைக்கவில்லை. போலியான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றுகிறார். இதன் மூலம் மக்கள் நல அரசு என மார்தட்டி கொள்ள முதல்-மந்திரி முயல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story