திருமணத்திற்காக கட்டாயமாக மத மாற்றம் : 10 ஆண்டுகள் வரை சிறை மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்


திருமணத்திற்காக கட்டாயமாக மத மாற்றம் : 10 ஆண்டுகள் வரை சிறை மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல்
x
தினத்தந்தி 26 Dec 2020 10:21 AM GMT (Updated: 2020-12-26T15:51:34+05:30)

திருமணத்திற்காக கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

போபால்: 

திருமணம் அல்லது ஏமாற்றி, கட்டாயமாக மதம் மாற்றுவோருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு  மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரையும், எஸ்சி அல்லது எஸ்டி பிரிவினரை கட்டாயபடுத்தி மதமாற்றம் செய்து திருமணம் செய்தால் 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குறிப்பிட்டார்.

இந்த சட்டம் தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறியதாவது:

பிற மதத்தினரை கட்டாயபடுத்தி மத மாற்றம் செய்து திருமணம் செய்தால் குற்றவாளிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதமும், 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க முடியும். 

1968 ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மத சுதந்திர சட்டத்திற்கு மாற்றாக இந்த சட்டம் இருக்கும். புதிய சட்டத்தின்படி, மதம் மாற்றுவதற்காக மட்டும் செய்யப்பட்ட திருமணம் செல்லுபடியாகாது. மதம் மாற விரும்புவோர், முன்னதாகவே மாவட்ட நிர்வாகத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, விரைவில் கூட உள்ள சட்டசபை தொடரில், தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். பின்னர் அமலுக்கு வரும். உத்தரபிரதேசத்தை  தொடர்ந்து,  மத்திய பிரதேச அரசு  இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.

Next Story