பிரதமர் மோடி முன்னிலையில் ஆவேசமடைந்து பேசிய மேற்கு வங்காள முதல் மந்திரி


பிரதமர் மோடி முன்னிலையில் ஆவேசமடைந்து பேசிய மேற்கு வங்காள முதல் மந்திரி
x
தினத்தந்தி 23 Jan 2021 12:31 PM GMT (Updated: 2021-01-23T18:01:49+05:30)

பிரதமர் மோடி முன்னிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி ஆவேசமடைந்து பேசினார்.

கொல்கத்தா,

அசாம் மாநிலத்தில் சிவசாகரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மனைகளுக்கான பட்டாக்களை பிரதமர் மோடி இன்று வழங்கினார்.  இதன்பின்னர் மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா நகருக்கு அவர் புறப்பட்டு சென்றார்.

தேச விடுதலைக்காக பாடுபட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.  அவரை கவுரவிக்கும் வகையில், பராக்கிரம திவாஸ் எனப்படும் துணிச்சல் தினம் அரசு சார்பில் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மோடி கொல்கத்தா நகருக்கு இன்று வருகை தந்துள்ளார்.  பின்னர் கொல்கத்தாவிலுள்ள நேதாஜி பவன் மற்றும் தேசிய நூலகம் ஆகியவற்றுக்கு சென்றார்.  நூலகத்தில் இருந்த கலைஞர்கள் மற்றும் சிறப்பு குழுவினரிடம் பிரதமர் உரையாடினார்.

இதன்பின்பு கொல்கத்தாவிலுள்ள விக்டோரியா நினைவகத்திற்கு அவர் சென்றார்.  அவரை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் ஆளுநர் ஜக்தீப் தங்கார் வரவேற்றனர்.  இதன்பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களை நோக்கி கையசைத்து பிரதமர் மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரதமர் முன்னிலையில், இந்திய தேசிய ராணுவ சீருடையை அணிந்தபடி குழந்தைகள் பாடல்களை பாடினர்.  மற்றும் இசை குழுவினரின் கச்சேரியும் நடந்தது.  வங்காள கவி என புகழப்படும் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ஏக்லா சோலோ ரே என்ற கவியை திரைப்பட பின்னணி பாடகி உஷா உதூப் பாடலாக பாடினார்.

இதன்பின்னர் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசுவதற்கு வரும்படி அழைக்கப்பட்டார்.  ஆனால், அவரை அழைத்தவுடன் ஜெய் ஸ்ரீ ராம் என்ற கோஷம் கூட்டத்தினர் இடையே இருந்து எழுப்பப்பட்டது.

இதனால் சற்று ஆவேசமடைந்த மம்தா பேசும்பொழுது, அரசு நிகழ்ச்சியில் கண்ணியம் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.  இது அரசியல் நிகழ்ச்சி அல்ல.

ஒருவரை அழைத்து விட்டு அவரை புண்படுத்துவது என்பது நல்லதல்ல.  இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நான் எதனையும் பேசபோவதில்லை என கூறினார்.  பிரதமர் இருக்கும்பொழுது, முதல் மந்திரி பானர்ஜி ஆவேசமுடன் பேசியது கூட்டத்தினரிடையே சற்று சலசலப்பு ஏற்படுத்தியது.

Next Story