டெல்லியில் பேரணி: பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய போக்குவரத்து பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியீடு


டெல்லியில் பேரணி:  பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய போக்குவரத்து பகுதிகள் பற்றிய அறிவிப்பு வெளியீடு
x
தினத்தந்தி 25 Jan 2021 12:02 PM GMT (Updated: 2021-01-25T17:32:57+05:30)

டெல்லியில் டிராக்டர் பேரணியை முன்னிட்டு நாளை திக்ரி எல்லை, ரோக்தக் சாலை உள்ளிட்ட பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்கும்படி போலீஸ் கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த நவம்பர் 26ந்தேதியில் இருந்து டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  எனினும், வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே உறுதியான எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்த சூழலில், இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 21ந்தேதி 10-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அதில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைப்பதாகவும், சுமுக தீர்வு காண ஒரு கூட்டுக்குழுவை அமைப்பதாகவும் ஒரு திட்டத்தை மத்திய அரசு முன்வைத்தது.

18 மாதங்களுக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்தாமல் நிறுத்தி வைக்க மத்திய அரசு ஒப்பு கொண்ட போதும் அவற்றை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவகாரத்தில் மத்திய அரசுக்கும், விவசாயிகள் சங்கத்தினருக்கும் இடையே கடந்த 22ந்தேதி நடந்த 11-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

குடியரசு தினத்தன்று நாங்கள் டிராக்டர் பேரணியை நடத்துவோம் என விவசாயிகள் தொடர்ந்து கூறி வந்தனர்.  இதற்கு அனுமதி வழங்குவதற்கு டெல்லி போலீசாருக்கே அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்று விவசாய சங்கங்கள் தெரிவித்தன.  இதற்காக விவசாயிகள் மற்றும் டெல்லி போலீசார் இடையே ஒப்பந்தம் ஒன்று முடிவாகி உள்ளது என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், டெல்லி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி எந்தெந்த வழியே நடத்தப்படும் என்பது பற்றி எழுத்து வடிவில் எதுவும் அளிக்கவில்லை.

வருகிற 26ந்தேதி நடத்தப்படும் டிராக்டர் பேரணி எந்தெந்த வழியாக செல்லும் என்பது பற்றி விவசாயிகள் எழுத்து வடிவில் எங்களுக்கு விவரம் அளித்த பின்னரே நாங்கள் அதனை ஆய்வு செய்து அதன்பின்னர் ஒரு முடிவுக்கு வருவோம் என கூறினர்.

இந்த சூழலில், பஞ்சாப் விவசாய சங்க கமிட்டியை சேர்ந்த சத்னம் சிங் பன்னு என்பவர் சிங்கு எல்லையில் செய்தியாளர்களிடம் நேற்று அளித்த பேட்டியில், குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள திரளான விவசாயிகள் டெல்லிக்கு வருகின்றனர்.

டெல்லி போலீசார் அனுமதி கொடுக்கிறார்களா அல்லது இல்லையா? என்பதெல்லாம் விசயமில்லை.  நாங்கள் டெல்லியின் வெளிவட்ட சாலையில் பேரணியை நடத்த இருக்கிறோம் என்று கூறினார்.

இந்நிலையில், டெல்லி போலீசின் உளவு பிரிவு அமைப்பின் சிறப்பு அதிகாரி தேவேந்திர பதக் நேற்று மாலை கூறும்பொழுது, குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்துவதற்கு ஒப்புதல் வழங்குவது என நாங்கள் இறுதி முடிவு எடுத்துள்ளோம்.

குடியரசு தின கொண்டாட்டங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்தவித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க கவனத்தில் கொள்ளப்படும்.

டிராக்டர் பேரணியானது திக்ரி, சிங்கு மற்றும் காஜிப்பூர் எல்லைகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும்.  இதன்பின்னர் பேரணியை முடித்து கொண்டு பழைய பகுதிகளுக்கே அவை திரும்பும்.

சிங்குவில் புறப்படும் பேரணி கஞ்ச்வாலா, பாவனா, ஆச்சண்டி எல்லை, கே.எம்.பி. விரைவு சாலை வழியே செல்லும்.  பின்பு சிங்கு எல்லைக்கு திரும்பும் என அவர் கூறினார்.

டிராக்டர் பேரணிக்கு இடையூறு ஏற்படும் வகையில் அச்சுறுத்தல் ஏற்படுத்த கூடிய சம்பவங்கள் நடைபெற சாத்தியம் உள்ளது என கவனத்தில் கொண்டு, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு தேவையான கூடுதல் போலீசார் குவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், டிராக்டர் பேரணியை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்து பகுதிகள் சில மாற்றியமைக்கப்பட்டு உள்ளன.  இதுபற்றி காவல் துறை இணை ஆணையாளர் (போக்குவரத்து) மீனா சவுத்ரி செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டிராக்டர் பேரணியை முன்னிட்டு போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.

தேசிய நெடுஞ்சாலை 44ல் நடைபெறும் போக்குவரத்து அதற்கு பதிலாக சிங்கு சனி மந்திர், அசோக் பார்ம், சுந்தர்பூர், முகர்பா சவுக் ஆகிய பகுதிகள் வழியே திருப்பி விடப்படுகிறது.

கஞ்ச்வாலா பகுதியில் நடைபெறும் போக்குவரத்து, கரலா, கஞ்ச்வாலா கிராமம் மற்றும் குதூப் காடி சாலை வழியே திருப்பி விடப்படும்.  தேசிய நெடுஞ்சாலை 10,  ரோக்தக் சாலை, திக்ரி எல்லை, நங்லோய், நஜாப்கார் சாலை மற்றும் நஜாப்கார்-ஜரோடா எல்லை ஆகிய பகுதிகளை பொதுமக்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.

Next Story