பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: யோகேந்திர யாதவ்


பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்: யோகேந்திர யாதவ்
x
தினத்தந்தி 26 Jan 2021 6:00 PM GMT (Updated: 26 Jan 2021 6:00 PM GMT)

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறைக்கு பொறுப்பேற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள யோகேந்திர யாதவ், வன்முறையால் வெட்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில், அரியானா மற்றும் பஞ்சாப் விவசாயிகள் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் டிராக்டர் பேரணியை நடத்துவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்தது. இதன்படி, இன்று விவசாயிகள் இன்று நடத்திய பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

இந்த நிலையில், விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து வெட்கப்படுகிறேன் என ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ்  இன்று தெரிவித்தார். யோகேந்திர யாதவ் இது பற்றி கூறும் போது, “ போராட்டத்தின் அங்கமாக இருப்பதால் போராட்டம் நடந்த விதம் குறித்து நான் வெட்கப்படுகிறேன். இதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். வன்முறையின் தாக்கம் எந்தவொரு போராட்டத்தையும் தவறான கண்ணோட்டத்துக்கு மாற்றிவிடும். 

நாம் எந்தப் பாதையில் போக வேண்டும் என்று முடிவு செய்துள்ளோமோ அந்தப் பாதையில்தான் பயணிக்க வேண்டும், வழி மாறக் கூடாது என்று நான் தொடர்ச்சியாக வலியுறுத்தினேன். இந்த இயக்கம் அமைதி வழியில் பயணித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்” என்றார்.


Next Story