சட்டமன்ற தேர்தலில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.விடம் வேட்பாளர்கள் இல்லை; புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.விடம் வேட்பாளர்கள் இல்லை. பா.ஜ.க.வினர் வேட்பாளர்களை பிடித்து வருகின்றனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
ஆலோசனை கூட்டம்
புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி தலைமை தாங்கி பேசினார். மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
கவர்னர் தொல்லை கொடுக்கிறார்
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் புதுவை மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறவேண்டும். அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலத்தில் பா.ஜ.க.வால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாது. கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து அரசுக்கு தொல்லை கொடுத்து வருகிறார். எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்ற அனுமதி வழங்குவது இல்லை. தேவையில்லாத கேள்விகள் கேட்டு கோப்புகளை திரும்பி அனுப்புகிறார்.
இதனால் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது. ஒருபுறம் கவர்னர் தொல்லை, மற்றொரு புறம் பிரதமர் மோடி தொல்லை. புதுவைக்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதி வழங்குவது இல்லை. தேவையான நிதியை ஒதுக்குவது இல்லை. அதையும் தாண்டி நமது அரசின் செயல்பாடு மூலம் புதுவை மாநிலம் 10 சதவீதம் பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது.
மக்கள் விமர்சனம்
புதுவை மாநிலத்தில் ஒரு அதிகாரிகளை கூட மாற்ற விடுவது இல்லை. காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப அனுமதி மறுக்கப்படுகிறது. தற்போது மின்துறையில் காலியாக உள்ள என்ஜினீயர் பணியிடங்கள், ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவலர் பணிக்கான தகுதித்தேர்வு விரைவில் நடத்தப்படும்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க.விடம் போட்டியிட வேட்பாளர்கள் இல்லை. பா.ஜ.க.வினர் தற்போது தான் வேட்பாளர்களை பிடிக்கின்றனர். நம்மிடம் பலமான வேட்பாளர்கள் உள்ளனர். நம்மிடம் இருந்தவர்கள் சிலர் தற்போது நம்மை விட்டு சென்று விட்டனர். அவர்களை பற்றி நாம் பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை சமூக வலைத்தளங்களில் பொதுமக்களே விமர்சனம் செய்யத்தொடங்கி விட்டனர். நாம் ஒற்றுமையாக இருந்தால் புதுவையில் மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதி. கட்சியில் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும்..
இவ்வாறு அவர் கூறினார்.
வீரப்பமொய்லி
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி வீரப்ப மொய்லி கூறியதாவது:-
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் புதுவை மாநிலத்தில் கவர்னர் கிரண்பெடி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது புதுவை மாநிலத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இதுவரை புதுவைக்கு கொண்டுவந்த திட்டம் என்ன?, மத்தியில் நேரு ஆட்சியில் இருந்த போது புதுவை மீது தனி கவனம் செலுத்தப்பட்டது. தற்போது மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.
அரசின் நடவடிக்கைகளில் கவர்னர் தொடர்ந்து தலையிடுகிறார். எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த அனுமதிப்பதில்லை. எனவே அவர் மீது புதுவை அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெறுவது உறுதி. இது நமக்கு மிகவும் முக்கியமான தேர்தல். நாம் வெற்றி பெற்றால் இந்த கவர்னர் புதுவையில் இருக்கமாட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் மாநில தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், வைத்திலிங்கம் எம்.பி., கட்சியின் மாநில பொறுப்பாளர் சஞ்சய் தத், முன்னாள் அமைச்சர் வல்சராஜ், கட்சியின் துணைத்தலைவர் பி.கே.தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏ.கே.டி. ஆறுமுகம் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story