2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் முழு விவரம்


2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்  முழு விவரம்
x
தினத்தந்தி 1 Feb 2021 3:09 PM GMT (Updated: 1 Feb 2021 3:09 PM GMT)

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் முழு விவரம் வருமாறு:-

புதுடெல்லி

வரலாற்றில் முதல் முறையாக இன்று காகிதமில்லா முறையிலான பட்ஜெட்டை  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து, பட்ஜெட் உரையை  வாசித்தார். 

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு  என்ற திருக்குறளை பட்ஜெட் தாக்கலின் போது, மேற்கோள் காட்டி பேசினார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும், வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும், காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன். என்பதே இக்குறலுக்கு பொருளாகும்.  

உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் இந்த நான்கையும் மன்னன் செய்திட வேண்டும் என்பதை இக்குறள் வலியுறுத்துகிறது. இக்குறளை அடிப்படையாகக் கொண்டு வரி விதிப்பில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இதே போல கடந்த ஆண்டு பட்ஜெட் உரையிலும் அவர் தமிழ் சங்க இலக்கிய நூலிலிருந்து உவமை காட்டியது நினைவுகூரத்தக்கது

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையை மதியம் 12.50 மணிக்கு முடித்தார். ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையை அவர் வாசித்தார். கடந்த  பிப்ரவரி 2020  பட்ஜெட் உரையை மக்களவையில் 162 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 42 நிமிடங்கள் பேசி சாதனை படைத்தார். அப்போது அவர், தனது பட்ஜெட் உரையின் இரண்டு பக்கங்களை மட்டுமே படிக்கவில்லை. 

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கொரோனா காலம்

கொரோனா காலகட்டத்தில் 80 கோடி  பொதுமக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டு உள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்களை மீட்க, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதம் அளவுக்கு அதாவது சுமார் 27 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.

உலகிலேயே மிக குறைந்த இறப்பு விகிதமாக 10 லட்சத்துக்கு  112 பேர் என்ற அளவில் இந்தியாவில் கொரோனா  உயிரிழப்பு இருக்கிறது.

உலகளாவிய பெருந்தொற்று காரணமாக சர்வதேச பொருளாதாரம் நிலைகுலைந்த போதிலும் மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக செயல்படும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதாரத்துறை

 கொரோனா தடுப்பூசி வழங்கலுக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் இந்த நிதியாண்டில் ஒதுக்கப்படுகிறது.

 சுகாதாரத்துறைக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 137 சதவீதம் அதிகமாக 2,23,846 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரெயில்வேக்கு 1,10,055 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.  அதில் ரூ .1,07,100 கோடி மூலதன செலவினங்களுக்கு மட்டுமே.

முதலீட்டு நிதிநிலையில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையோடு ஒப்பிடும் போது அது 34.5 சதவீதம் உயர்வு.

தொழிலாளர்கள் நலம்

அனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளது.
 
கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளது.
 
அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
 
சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

கல்வி

100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன.

லே -யில் புதிய மத்திய பல்கலைக் கழகம் தொடங்கப்படவுள்ளது.
 
மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள்.
 
அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35,219 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம்.

தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு.

மொபைல் போன்

2021-22 ஆம் ஆண்டின் பட்ஜெட்  அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் இன்று தாக்கல் செய்து பேசினார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

இப்போது    400 தயாரிப்புகளுக்கு அரசாங்கம் விலக்கு அளிப்பதாக நிதியமைச்சர் நிராமலா சீதாராமன் அறிவித்துள்ளார். இவற்றில், சார்ஜர்களின் பாகங்கள் மற்றும் மொபைல் போன்களின் துணை பாகங்கள் குறித்த சில விலக்கு திரும்பப் பெறப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்தி வேகமாக வளர்ந்துள்ளது. மொபைல் மற்றும் சார்ஜர்கள் போன்ற பொருட்களை இப்போது ஏற்றுமதி செய்கிறோம். அதிக உள்நாட்டு மதிப்பு சேர்த்தல்களுக்கு, சார்ஜர்கள் மற்றும் மொபைல் போன்களின் துணைப் பகுதிகளுக்கு விலக்கு அளிக்கிறோம். மொபைலின் சில பகுதிகள் நில் வீதத்திலிருந்து மிதமான 2.5 சதவீதத்திற்கு நகரும் ”என்று சீதாராமன் கூறினார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செல்போன் உதிரி பாகங்களுக்கு வரிச்சலுகை ரத்து செய்யப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்து உள்ளார்.

எல்ஐசி பங்குகள்

காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பு 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஐடிபிஐ வங்கி, மேலும் இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார் மயமாக்கப்படவுள்ளன. 

எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்கள் வாங்கும் வகையில் வெளியிடப்பட உள்ளன.

வரி தொடர்பான அறிவிப்புகள்

 ஓய்வூதியம் மற்றும் வட்டி வாயிலாக மட்டுமே வருமானம் பெறும் 75 வயதை கடந்த முதியவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வரி கோப்புகளை மீண்டும் திறக்கும் கால வரம்மை 6 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

வருமான வருமான வரி தாக்கல் செய்வதை மேலும் எளிதாக்குவதற்கு, பத்திரங்களை பட்டியலிடுவதன் மூலதன ஆதாயங்கள் மற்றும் வட்டி வருமானம் ஐடிஆர்களில் முன்பே நிரப்பப்படும்.

வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களை முகமற்றதாக மாற்றவும், தேசிய வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய மையத்தை அமைக்கவும் மத்திய அரசு முன்மொழிந்தது.5. டிஜிட்டல் முறைகள் மூலம் தங்கள் வணிகத்தை அதிகம் செய்யும் நிறுவனங்களுக்கு வரி தணிக்கை வரம்பிலிருந்து விலக்கு (இரண்டு மடங்காக உயர்த்தி) ரூ .10 கோடி விற்றுமுதல் என்று நிதியமைச்சர் அறிவித்தார்.

ரூ .50 லட்சத்துக்கும் அதிகமான வருமானத்தை மறைக்கும் கடுமையான வரி குற்றங்களை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திறக்க முடியும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நிதிபற்றாக்குறை

12.5 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட உள்ளது. வெள்ளியின் மீதான சுங்க வரியும் குறைக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை 6.8 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் அரசு வெளிச்சந்தையிலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய் திரட்டத் திட்டமிட்டுள்ளது.

வருவாயைப் பெருக்கும் வகையில் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள சொத்துக்களைப் பணமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ரெயில்வேத் துறையில் சிறப்பு வழித்தடங்கள் ஏற்படுத்தப்பட்டு அதன்மூலமாகவும், விமானப் போக்குவரத்துத் துறையில் மேலும் சில விமான நிலையங்களை தனியாருக்கு வழங்குவதன் மூலமாகவும் இத்தகைய பணமாக்கல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஜவுளித்துறை

ஜவுளித்துறையில் உலகத்தரம் வாய்ந்த நவீன கட்டமைப்புகளை உருவாக்க மித்ரா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த 3 ஆண்டுகளில் 7 ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும். 

சமையல் எரிவாயு

உஜ்வாலா திட்டத்தின் கீழ் மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்  

100 மாவட்டங்களில் குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது 


விவசாயத்துறை

விவசாயிகளுக்கு போதிய அளவு வேளாண் கடன் வழங்கும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.16.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்கும் அளவு அதிகரிக்கப்படுகிறது. மேலும் கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்பு போன்ற வேளாண் சார்ந்த துறைகளுக்கும் இத்தகைய கடனை வழங்க அரசு கவனம் செலுத்தி வருகிறது.

ஊரக வளர்ச்சி மேம்பாட்டு நிதி ரூ.30,000 கோடியிலிருந்து ரூ.40,000 கோடியாக அதிகரிக்கப்படுவதாக தெரிவித்தார். 

வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் (நபார்டு) கீழ் செயல்படுத்தப்படும் நுண்பாசனத் திட்டத்திற்கான நிதி தற்போது ரூ.5,000 கோடி அளவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவித்தார்.

இ-நாம் திட்டத்தின் கீழ் 1.68 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர் என்றும், ரூ.1.14 லட்சம் கோடி அளவுக்கு இந்த இ-நாம் மூலம் வணிகம் நடைபெறுவதாகவும் அமைச்சர் கூறினார். 

வேளாண் உற்பத்தி பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும், விவசாயிகள் 1.5 மடங்கு கூடுதல் வருவாய் பெறுவதை குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் பொருட்களை 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் 1.72 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயப் பொருட்கள் கொள்முதல் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது

மேலும் இந்தத் திட்டம் வெளிப்படையாகவும், போட்டித்தன்மையுடனும் இருக்க 1000 மண்டிகள் இ-நாம்-வுடன் இணைக்கப்படுவதாக  அவர் தெரிவித்தார்.

Next Story