டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க சாலையில் தடுப்புகள், முள்வேலிகள்; ராகுல் காந்தி கண்டனம்


விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்காக டெல்லி - காசிப்பூர் எல்லையில் போலீசார் தடுப்புகளை வைத்திருப்பதை படத்தில்
x
விவசாயிகள் போராட்டத்தை தடுப்பதற்காக டெல்லி - காசிப்பூர் எல்லையில் போலீசார் தடுப்புகளை வைத்திருப்பதை படத்தில்
தினத்தந்தி 3 Feb 2021 1:33 AM IST (Updated: 3 Feb 2021 1:33 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தடுக்க தடுப்புகள், முள்வேலிகளை போலீசார் அமைத்துள்ளனர். இதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம்
3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு வட மாநில விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவில்லை.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தியபோது வன்முறை வெடித்தது. இது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்து, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முள்வேலிகள் அமைப்பு
இதற்கிடையே விவசாயிகள் மீண்டும் 6-ந் தேதி தேசிய, மாநில நெடுஞ்சாலை மறியல் போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதையொட்டி, டெல்லி எல்லைகளுக்கு விவசாயிகள் அதிக அளவில் வருவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிங்கு எல்லையில் சிமெண்டு தடுப்புகள், இரும்பு கம்பிகளால் பிணைக்கப்பட்டுள்ளன. டெல்லி-அரியானா எல்லையில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் தற்காலிக சுவர் எழுப்பப்படுகிறது. காசிப்பூர் எல்லையில் பல அடுக்கு தடுப்புகளுடன் முள்வேலிகளும் போடப்பட்டுள்ளன. இதுதவிர சாலைகளில் பெரிய ஆணிகளையும் போலீசார் பதித்துள்ளனர்.

ராகுல் காந்தி கண்டனம்
இந்த தடுப்புகள், சுவர்களின் புகைப்படங்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதில், ‘‘இந்திய அரசே, பாலங்களை கட்டுங்கள், சுவர்களை அல்ல’’ என்று அவர் கூறியுள்ளார்.

விவசாயிகளை தடுக்காமல், அவர்களுடன் இணக்கமான பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு பதில்
இதற்கிடையே பேச்சுவார்த்தை தொடங்க அரசு தயாராக இருப்பதாக தெரிவித்து பிரதமர் மோடியின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில், போராடும் 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கூறி இருப்பதாவது:-

டெல்லியில் தடுப்புவேலிகள் அமைப்பது அதிகரித்துள்ளது. அகழிகள் தோண்டப்படுகின்றன. சாலைகளில் தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. உள்சாலைகள் மூடப்படுகின்றன. இணையதள சேவைகள் நிறுத்தப்படுகின்றன. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மூலம் போராட்டங்களுக்கு திட்டமிடுகிறார்கள். இதெல்லாம் அரசாங்கம், போலீஸ் மற்றும் நிர்வாகம் மூலம் விவசாயிகள் மீது நடத்துகிற தாக்குதல் ஆகும்.

போராட்ட களங்களில் இணையதள சேவையை நிறுத்துதல், போராடும் விவசாய இயக்கங்களின் டுவிட்டர் கணக்குகளை மூடுதல் போன்றவை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல் ஆகும்.

தெளிவான நிலைப்பாடு
பல்வேறு மாநிலங்களில் இருந்து தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு அதிகரித்து வருவது குறித்து அரசு மிகுந்த அச்சத்தில் இருப்பதாக தெரிகிறது. எனவே விவசாயிகளுக்கு எதிராக போலீஸ், நிர்வாகம் நடத்தி வருகிற துன்புறுத்தல்களை உடனடியாக நிறுத்தும் வரையிலும் அரசுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்று திங்கட்கிழமை நடந்த கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.

பேச்சு வார்த்தைக்கான முறையான அழைப்பு எதுவும் வரவில்லை. அரசிடம் இருந்து அப்படி அழைப்பு வராதபோதும், போலீசாரின் சட்டவிரோத காவலில் உள்ள விவசாயிகள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட்ட பின்னரே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்பதை நாங்கள் தெளிவுபடுத்துகிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story