கேரளா, மராட்டியத்துக்கு மத்திய குழு விரைவில் பயணம்; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும்


கேரளா, மராட்டியத்துக்கு மத்திய குழு விரைவில் பயணம்; கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும்
x
தினத்தந்தி 3 Feb 2021 2:16 AM IST (Updated: 3 Feb 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கேரளா, மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய அரசு விரைவில் நிபுணர் குழுக்களை அனுப்புகிறது.

70 சதவீத பாதிப்பு
தற்போது, நாடு முழுவதும் கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் இறங்குமுகமாக உள்ளது. ஆனால், கேரளா, மராட்டியம் ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் இன்னும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

தற்போதைய மொத்த பாதிப்பில் 70 சதவீதம், கேரளா மற்றும் மராட்டியத்தில்தான் ஏற்பட்டுள்ளது. அதாவது, தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில்70 சதவீதம் பேர், கேரளா மற்றும் மராட்டியத்தில்தான் இருக்கிறார்கள்.

நிபுணர் குழுக்கள்
நேற்றைய நிலவரப்படி, கேரளாவில் 69 ஆயிரத்து 456 பேரும், மராட்டியத்தில் 44 ஆயிரத்து 944 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

எனவே, அங்கு கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக, நிபுணர் குழுக்களை அனுப்பி வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மராட்டியத்துக்கு செல்லும் நிபுணர் குழுவில் தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம், டெல்லியில் உள்ள ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரி ஆகியவற்றை சேர்ந்த நிபுணர்கள் இடம்பெறுகிறார்கள்.

கேரளாவுக்கு செல்லும்நிபுணர் குழுவில் மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரிகளும், திருவனந்தபுரத்தில் உள்ள சுகாதார துறையின் பிராந்திய அலுவலக உயர் அதிகாரிகளும், டெல்லியில் உள்ள லேடி ஹர்டிங்கே மருத்துவ கல்லூரியை சேர்ந்த நிபுணர்களும் இடம்பெறுகிறார்கள்.

தடுப்பு நடவடிக்கைகள்
இந்த நிபணர்கள், இரு மாநிலங்களிலும் அங்குள்ள சுகாதார த்துறையுடன் இணைந்து செயல்படுவார்கள். கள நிலவரத்தை ஆய்வு செய்வார்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்த பின்பற்ற வேண்டிய பொது சுகாதார நடவடிக்கைகளை பரிந்துரை செய்வார்கள்.

இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Next Story