புதுவை மாநிலத்துக்கு பிரதமர் அறிவித்த புதிய திட்டம் என்ன? நாராயணசாமி கேள்வி


புதுவை மாநிலத்துக்கு பிரதமர் அறிவித்த புதிய திட்டம் என்ன? நாராயணசாமி கேள்வி
x
தினத்தந்தி 27 Feb 2021 10:51 AM GMT (Updated: 27 Feb 2021 10:51 AM GMT)

புதுவை மாநிலத்துக்கு பிரதமர் மோடி எந்த புதிய திட்டத்தை அறிவித்தார்? என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பினார்.

புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களை திசை திருப்ப...
புதுச்சேரி வந்த பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். அதில் விழுப்புரம்- நாகப்பட்டினம் 4 வழிச்சாலை திட்டம் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கடந்த 2014-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த திட்டத்தை 6 ஆண்டுகளாக கிடப்பில் போட்டார். ஆனால் இப்போது ரூ.2 ஆயிரத்து 426 கோடி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். அந்த 4 வழிச்சாலையில் 15 கி.மீ. மட்டுமே காரைக்கால் வழியாக செல்கிறது.

மீதமுள்ள 95 சதவீத சாலை தமிழக பகுதியில் வருகிறது. ஆனால் அது புதுவைக்கான திட்டம் போன்று புதுவை, காரைக்கால் மக்களை திசை திருப்பும் விதமாக புதுவை வந்து அடிக்கல் நாட்டுகிறார். 

காரைக்கால் ஜிப்மர் கிளைக்கு 4 ஆண்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதற்கு இதுவரை நிதி ஒதுக்காமல் 4 ஆண்டு கழித்து வந்து அடிக்கல் நாட்டுகிறார். மதுரையில் எய்ம்ஸ் கிளை அமைக்க அடிக்கல் நாட்டி 6 ஆண்டு ஆகிறது. ஆனால் இதுவரை எந்தவித பணியும் நடக்கவில்லை.

தெரிந்துகொள்ளாமல்...
சாகர்மாலா திட்டம் அறிவித்து 3 வருடமாகிவிட்டது. ஆனால் இப்போதுதான் அடிக்கல் நாட்டுகிறார். புதுச்சேரி நகராட்சி கட்டிடம் முழுக்க முழுக்க உலக வங்கியின் கொடையில் கட்டப்பட்டது. அதற்கு மத்திய அரசு ஒரு பைசாகூட நிதி தரவில்லை. அது சுனாமி நிதியில் கட்டப்பட்டது. அப்படியிருக்க அதை திறக்க பிரதமருக்கு எங்கு தார்மீக உரிமை உள்ளது? புதுவையில் வளர்ச்சி இல்லை என்று பிரதமர் பேசுகிறார். புதுவை மாநிலத்தின் வளர்ச்சி 10.2 சதவீதம். ஆனால் மத்திய அரசின் வளர்ச்சி விகிதம் மைனஸ் 7 சதவீதம் தான்.

புதிய திட்டம் அறிவித்தாரா?
புதுவை மாநிலத்துக்கு என்று ஏதாவது புதிய திட்டத்தை அறிவித்தாரா? அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம், ரே‌‌ஷன்கடை திறப்பு, ஊழியர் சம்பளம் என பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்களிடம் இருந்தது. மில்கள் மூடல், மீனவர் உதவித்தொகை உயர்த்தி வழங்காதது, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காதது எல்லாம் அவரால் நியமிக்கப்பட்ட கவர்னர் செய்தது. அதற்காக எங்களை எப்படி குறைகூற முடியும்?

புதுவை ஏற்கனவே கல்வி, சுகாதாரம், சுற்றுலாவில் முதல் இடத்தில் உள்ளது. இவர்களால் புதுவையில் ஆட்சியை கவிழ்த்ததை தவிர வேறு எந்த திட்டமும் வரவில்லை. இப்போது பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வர நினைக்கிறார்கள். இப்போதுகூட ரூ.90 கோடியில் சாலை அமைக்கும் பணிக்கு ஒப்புதல் அளித்திருப்பது நாங்கள் அனுப்பிய கோப்புக்குத்தான். எங்களது 
திட்டங்களுக்கு மத்திய அரசு ஒத்துழைத்து இருந்தால் புதுவை இன்னும் வளர்ச்சி பெற்றிருக்கும். எங்கள் அரசை கவிழ்த்ததில் எனக்கு வருத்தமில்லை. மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்தியதுதான் எனக்கு வருத்தம்.

இவ்வாறு நாராயணசாமி கூறினார்.

விருப்ப மனு
காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கூறும்போது, புதுவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் மார்ச் மாதம் 5-ந்தேதி வரை கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் தலைமையிலான குழுவிடம் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என்று கூறினார். இதற்கு கட்டணமாக ரூ.5 ஆயிரமும், ஆதிதிராவிடர், பெண்கள் ரூ.2 ஆயிரத்து 500 செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

காங்கிரஸ் உறுப்பினர்
வைத்திலிங்கம் எம்.பி. கூறும்போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் கடந்த தேர்தல்களைப்போல் அல்லாமல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என்றார்.

Next Story